காங். தேர்தல் அறிக்கை-காற்றில் கரையும் கற்பூரம்

-மதுக்கூர் இராமலிங்கம்

“துன்பத்தை கட்டி சுமக்கத் துணிந் தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே” 

என்பது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தங்கப்பதுமை படத்திற்காக எழுதிய பாடலில் வரும் வரிகளாகும். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப் பதை பார்க்கும்போது மக்கள் கவிஞரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

இந்தியாவில் நடப்பது அதிபர் ஆட்சி முறை அல்ல. எனவே தனிஒரு மனிதரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தவேண்டிய அவசியமும் இல்லை. பிரதமர் யார் என் பது தேர்தல் முடிவுக்குப் பிறகு முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் ஓராண்டுக்கு முன்னாலேயே அத்வானி தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக அறிவித்தது. அத்வானியும் அன்று துவங்கி பிரதமர் போலவே தனக்குத் தானே பேசத்துவங்கிவிட்டார். ஆனால் அந்த கட்சிக்குள்ளேயே பைரோன் சிங் ஷெகாவத், நரேந்திர மோடி என அத்வா னிக்கு ஆப்பு வைக்கும்வகையில் உள் குத்து குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை பின்பற்றி, இதுவரை கிராமப் பஞ்சாயத்து வார்டு தேர்தலில் கூட நேரடி யாக போட்டியிடாத மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளர் என்று பட்டையைக் கட்டி களத்தில் இறக்கிவிட்டுள்ளது. 

அதிலும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன் சிங்கால் மட்டுமே ஸ்திரத்தன்மையை தரமுடியும் என்று கூறியுள்ளார். அமெரிக்காவுடனான அடிமை சாசனத்தில் கையெழுத்திட ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள், அரசுக்கு அளித்துவந்த ஆதர வை விலக்கிக்கொள்வதாக அறிவித்தன. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசைக் காப்பாற்றிக்கொள்ள மத்திய ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதம் கண்டு நாடே தலைகுனிந்தது. மக்கள வையின் மைய மண்டபத்தில் கொட்டப் பட்ட கரன்சி நோட்டுகளில் அச்சிடப்பட் டிருந்த காந்தி படம்கூட கண்ணீர் சிந்தியது. இத்தகைய ஸ்திரத்தன்மையை தந்தவர் தான் மன்மோகன் சிங். இதுதான் காங்கி ரஸ் கட்சி தரப்போகும் ஸ்திரத்தன்மை என்றால் விழிப்போடு இருக்க வேண்டி யது நாட்டு மக்கள்தான்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக் கையில் வழக்கம் போலவே ஏராளமான வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தல் துவங்கி 2009 தேர்தல்வரை காங்கிரஸ் கட்சி இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை யும், தேர்தல் அறிக்கைகளையும் ஒருசேர அடுக்கி வைத்தால் இமயமலையைவிட உயரமான பெரும் பொய்மலையாக அது உயர்ந்து நிற்கும். 

வறுமையே வெளியேறு என்றார்கள், எருமைமாடு கூட அதைக் கண்டுகொள் ளவில்லை. வேலையின்மையே வெளியே போ என்றார்கள், இதன் பொருள் வேலை யில் உள்ளவர்களை வெளியே அனுப்பு வதுதான் என்பது பிறகுதான் புரிந்தது. 

கடந்த 2004 மக்களவை தேர்த லின்போதும் காங்கிரஸ் கட்சி வண்டி வண்டியாக மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித்தந்தது. அந்த வாக்குறுதிகளில் ஒன்று- குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை என்பது. இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குடும்பங்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை காங்கிரஸ் கட்சி அறிவிக்கத் தயாரா? மன்மோகன் சிங் குடும்பத்தில் ஒருவருக்கு பிரதமர் வேலை கிடைத்தது, ஒருசில குடும்பங்களுக்கு மந்திரி வேலை கிடைத்தது என்பது மட்டும்தான் உண் மை. மறுபுறத்தில் உலகப் பொருளாதார நெருக்கடியை தாராளமய பாதையிலேயே சென்று காங்கிரஸ் தலைமையிலான அரசு சமாளிக்க முயன்றதால் கோடிக் கணக்கான குடும்பங்கள் வேலையிழந்து வீதிக்கு வந்துள்ளன என்பதுதான் உறுத் தும் உண்மை.

ஆண்டுக்கு ஒருகோடி புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் காங் கிரஸ் கட்சி 2004 தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. கடந்த ஐந்தாண்டு களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக் கப்படவில்லை என்பது மட்டுமின்றி இருந்த வேலைகளும் பறிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம் பாட்டுத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறி யது. ஆனால் மூன்று வயதுக்கும் கீழான குழந்தைகளில் 40 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் குறைவான எடையை கொண்டுள்ளனர் என்பது புள்ளி விவரம் கூறும் உண்மை. பாதுகாப் பான குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமை என்று கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூறி யது ஆனால் 2 லட்சத்து 19 ஆயிரம் குடும் பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்ப தில்லை என்பதுதான் உண்மை.

காங்கிரஸ் கட்சி இப்போதைய தேர் தல் அறிக்கையில் கூறியுள்ள பல வாக் குறுதிகள் கடந்த தேர்தல் அறிக்கையி லிருந்து அப்படியே எடுத்தாளப்பட் டுள்ளன. அன்றைக்கு ஒரு பேச்சு இன் றைக்கு ஒரு பேச்சு என்பது எங்கள் அகரா தியில் இல்லை என்று வேண்டுமானால் காங்கிரஸ்காரர்கள் பீற்றிக்கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சி இப்போது வெளியிட் டுள்ள தேர்தல் அறிக்கையில் பெண்க ளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 33 சத வீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த தேர் தல் அறிக்கையில் கூறியபடி நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண் களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அந்த கட்சி தலைமையிலான அரசு, எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்க வில்லை. நாட்டில் பெண்களுக்கு 33 சத வீத இடஒதுக்கீடு வழங்க வக்கற்றவர்கள் தற்போது, வீட்டில் உள்ள பெண்களுக்கு அரசு வேலையில் 33 சதவீதம் வழங்கு வோம் என்று கொஞ்சம் கூட கூச்சமில் லாமல் வாக்குறுதி தருகின்றனர். ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்’ என்ற கிராமத்து பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது. 

நாட்டு நலனுக்கேற்ற சுயேட்சையான வெளியுறவுக்கொள்கை தொடரும் என் றும் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆனால் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் இந் தியாவின் சுயேட்சையான அயல்துறை கொள்கையை காலில் போட்டு மிதித்து அமெரிக்க வல்லரசின் இளைய கூட்டா ளியாக நமது இந்திய திருநாட்டை மாற் றும் வகையில் அணுசக்தி உடன்பாட் டில் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்கா வின் கேந்திர ராணுவ கூட்டாளி நாடு களில் ஒன்றாக இந்தியா அவமானகர மான முறையில் மாற்றப்பட்டது. இஸ் ரேல், பாலஸ்தீனத்தின் மீது கொடூரத் தாக் குதல் தொடுத்தபோதும் மத்திய அரசு மவு னம் சாதித்தது. அமெரிக்காவுக்கு கூஜா தூக்க ஈரானுக்கு எதிராக ஐ.நா. சபையில் செயல்பட்டதோடு ஈரானிலிருந்து பைப் லைன் மூலம் எரிவாயு கொண்டுவரும் திட்டத்தையும் கிடப்பில் போட்டது. 

இவர்களது ஆட்சியில்தான் உலகிற்கு உணவு படைக்கும் விவசாயிகள் வாழ வழியின்றி பல்வேறு மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போதைய தேர்தல் அறிக் கை, விவசாயம் என்றாலே லாபம் இல் லாத தொழில் என்ற நிலை மாற்றப்பட்டு அனைவரும் விரும்பி ஏற்கும் தொழிலாக விவசாயம் மாற்றப்படும் என்று கூறப்பட் டுள்ளது. விவசாயிகளின் வீட்டிற்கே சென்று அரசு சார்பில் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் எனப் படும் முன்பேர வர்த்தக மோசடி முறை யை கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்க்கையை தரிசாக்கியது இவர்கள் தான். இடதுசாரி கட்சிகளும் நாடாளு மன்ற நிலைக்குழுவும் கடுமையாக வற் புறுத்தியபோதும் அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விற்பனையிலும் முன்பேர வர்த்தகமுறையை ரத்து செய்ய மறுத்தவர்கள்தான் இவர்கள். இன் றைக்கு வீட்டுக்கே வந்து விளைபொரு ளை வாங்கிக்கொள்கிறோம் என்று சின்ன குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் காட்டுவது போல ஏமாற்ற முயல்கிறார்கள். வேண்டு மானால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் அவர்களது வீட்டு வாசலுக்கு வந்து பிணத்தை எடுத்து அடக்கம் செய்கிறோம் என்று இவர்கள் வாக்குறுதி தரலாம்.

மத்திய அரசின் உணவுக்கிடங்குகளில் தேங்கி வீணாகும் உணவு தானியங்களை மாநிலங்களில் பொது விநியோக முறைக்கு தர மறுத்த காங்கிரஸ் அரசு, உணவு பாது காப்பு குறித்து பேசுவது வெட்கக்கேடா னது. மின்வாரியங்களை மூன்றாக பிரித்து தனியாருக்கு தர ஆணைமேல் ஆணை யாக வெளியிட்டு மாநிலங்களை மிரட்டும் இவர்கள், மின்கட்டணத்தை குறைப்பார் களாம். கேட்பவன் கேணையாக இருந் தால் கேழ்வரகில் நெய் வடியுமாம். இவர் கள் கூறுவதையெல்லாம் இந்திய மக்கள் நம்பி விடுவார்கள் என்ற நினைப்பு.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்க கூட்டணி ஆட்சிக்கா லத்தில் உருப்படியான ஒருசில வேலை கள் நடந்தன என்றால் அதற்கெல்லாம் முழுமுதல் காரணம் இடதுசாரி கட்சி களின் நிர்பந்தமே. மறுபுறத்தில் இந்திய மக்களுக்கு எதிரான அனைத்து நட வடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சியே பொறுப்பேற்றாக வேண்டும். 

பெரும்பாலான மாநிலங்களில் காங் கிரசை அதன் கூட்டாளிகளே கழற்றி விட்ட நிலையில் தேர்தல் அறிக்கை எனும் காகிதப்படகில் ஏறி தப்பித்துவிட லாம் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. மக்களின் கோபாவேச அலையில் இந்த படகு கவிழ்வது நிச்சயம். அதைப்பிடித் துக் கொண்டு தொங்குபவர்களும் பரிதா பமான நிலையையே அடைவார்கள்

கருத்துகள் இல்லை: