நடுநிலை மேதாவிகள்

நடுநிலை மேதாவிகள்

ஓட்டோ ரேனே காஸ்டில்லோ (கௌதமாலா கொரில்லா போராளி)
தமிழாக்கம் - செம்மலர் இரா சிந்தன்


ஒரு நாள்
என் தேசத்தின்
நடுநிலை மேதாவிகள்
சாதரண மனிதர்களால்
விசாரிக்கப்படுவார்கள்

"உங்கள் தேசம்
மெதுவாக
மரணமடைந்து கொண்டிருந்த போது
தனியே ஒதுங்கி நிற்கும்
ஒரு அழகிய தீயைப் போல . .
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?"
என்று கேள்வி கேட்கப்படுவார்கள்

நடுநிலை மேதாவிகளே ...

உங்கள் உடைகளைப் பற்றி ....
மத்திய உணவிற்கு பின்
உங்கள் குட்டி தூக்கத்தைப் பற்றி....
அவர்கள் கேட்கப் போவது இல்லை

"ஒன்றுமில்லாதத்தின் உள்ளடக்கம்" பற்றிய
உங்கள் உப்பு சப்பற்ற விவாதங்களை...
அவர்கள் தெரிந்துகொள்ளப் போவதில்லை

உங்கள் வருமானம் குறித்த
மிகுந்த பட்டறிவு குறித்து.....
அவர்களுக்கு கவலை இல்லை

கேள்விகள்

கிரேக்க மெய்ஞானத்திலிருந்தோ
அல்லது
உங்களில் ஒருவன்
மரணமடைந்து கொண்டிருந்த போது
'உங்கள் கேவலமான சொந்த நலனுக்காக'
மௌனம் காத்தது பற்றியோ....
இருக்கப் போவதில்லை

பொய்களின் நிழலில் பிறந்த
உங்கள் வியாக்யானங்கள் தொடர்பாக
அவர்கள் ஒன்றுமே கேட்கப் போவதில்லை
..........

ஒரு நாளில்
அந்த சாதாரண மனிதன் வருவான்

மேதாவிகளின்
புத்தகங்களிலும் கவிதைகலிலும் காணப்படாத
ஆனால்
தினமும் அவர்களுக்கு
அரிசியும் பாலும்
ரொட்டியும் முட்டையும்
கொடுத்த
அவர்களின் ரதங்களை ஓட்டிய
அவர்களின் நாய்களையும் தொட்டங்களையும் கவனித்த
அவர்களுக்காய் உழைத்த

அந்த சாதரண மனிதன் கேட்பான்

"என் போன்ற ஏழைகள்
தன் வாழ்க்கையையும் காதலையும் தொலைத்து
துன்பத்தில் உழன்று கொண்டிருந்த போது ...
நடுநிலை மேதாவிகளே !!!
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

என் இனிய தேசத்தின்
நடுநிலை மேதாவிகளே
உங்களால் பதில் சொல்ல முடியாது !

அப்போது
மௌனம் எனும் கழுகுகள் வந்து
உங்கள் குரல்வளையை கவ்வும்

உங்கள் பாவங்கள்
உங்கள் ஆன்மாவையே தூக்கிச்செல்லும்

"அந்தக் கேள்வியின் முன்
நீங்கள் ஒரு நிமிடம் வெட்கித் தலைகுனிந்து
கூனிக் குறுகி நிற்பீர்கள் "

தியாக சீலரா எடியூரப்பா?

கர்நாடக தேர்தல் முடிவு எடியூரப்பாவின் தியாகத்திற்கும், கவுடா - குமாரசாமி குடும்பத்தின் துரோகத்திற்க்கும் கிடைத்த முடிவு என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவும், தேவ கவுடா கட்சியும் ஆளுக்கு பாதி என்ற அடிப்படையில் ஆட்சியமைத்தன. முதலில் முதல்வரான குமாரசாமி தமது பதவிக் காலம் முடிந்தவுடன் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்தார்.
எடியூரப்பா உடனடியாக பதிவியை தியாகம் செய்கிறேன் என்று அறிவிக்கவில்லை. மாறாக, மாநிலம் முழுவதும் சென்று தேவகவுடா குடும்பத்தின் மீது மணல் வாரி தூற்றினார். இனிமேல் பாஜகவினர் கோயிலுக்கு செல்லும் பொழுது, தேவகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இடையில் கவுடா கட்சி திடீரென்று பல்டி அடித்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. உடனடியாக ' தியாக சீலர் ' எடியூரப்பா ஓடோடிச் சென்று முதல்வர் நாற்காலியை கைப்பற்றினார். ஒரு வார காலம் தான் அவரது ஆட்சி நீடித்தது. ஒரு நாளேனும் முதல்வராக இருந்தால் போதும் என்று ஆலாய்ப் பறந்தவர் எப்படி தியாக சீலர் ஆனார் என்று புரியவில்லை. சந்தர்ப்பவாதத்தின் கடைக்கோடிக்கு சென்றது கவுடா கட்சி மட்டும் அல்ல பாஜகவும் தான்.
எடியூரப்பா குறுகிய காலம் ஆட்சியில் இருந்த போதும், அந்த இடைக்காலத்தில் புரிந்த சாதனையை மக்கள்
அங்கீகரித்துள்ளனர் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அப்படி என்ன எடியூரப்பா ஒரு வார காலத்தில் சாதனை செய்தார் என்பது தான் புரியவில்லை. அடுத்ததாக நம்மூர் இல. கணேசன் "கர்நாடக முதல்வராக பொறுப் பேற்றுள்ள எடியூரப்பா ஒரு அப்பழுக்கற்ற தேச பக்தர் என்றும், அவர் நிச்சயம் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு இடையூறு செய்யமாட்டார் என்று கூறுகிறார். ஓகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தம் என்று முதன் முதலாக கிளப்பி விட்டதே எடியூரப்பா தான். அப்போது இல. கணேசன் " பாவம் எடியூரப்பா விபரம் தெரியாதவர், அவரை யாரோ ஓகே நக்கலுக்கு சுற்றுலா போகலாம் என்று அழைத்து வந்து விட்டார்கள் என்று கூறினார்.
இப்படி யார் கூப்பிட்டாலும் எங்கு வேண்டுமானாலும் சென்றும் போராட்டம் நடத்தும் எடியூரப்பா நாளை குஜ்ஜார் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த ராஜஸ்தான் சென்றாலும் ஆச்சரியம் இல்லை. பாவம் கர்நாடக மக்கள்.

பொருளாதாரம்

கச்சாஎண்ணை-விலைஉயர்வு-மாற்று தீர்வு

(இடதுசாரிகள் விமர்சிப்பவர்கள் மட்டுமல்ல. மாற்று திட்டத்தை முன்வைப்பவர்கள்)

பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் அதிகரித்தால், பெட் ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.90 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். டீசல் விலையில் 1 ரூபாய் அதிகரித்தால் மாதம் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.360 கோடி கிடைக்கும். கேஸ், சிலிண்டர் விலையில் 10 ரூபாய் அதிகரித்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.58 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.

ஆனால், தற்போது அமலில் உள்ள கலால் வரியில் ஒரு சத வீதத்தை குறைத்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைக்கப் போகும் வருமானம் ரூ.1380 கோடி என்பது கவனிக்கத்தக்கது. டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியில் 1 சதவீதத்தை குறைத்தால் ஓராண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 270 கோடி வருமானம் கிடைக்கும்.

கச்சா எண்ணெய்க்கு தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 699 கோடி வருமான இழப்பு மிச்சமாகும். இதே போல பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் சுங்க வரி தற்போது 7.5 சதவீதமாக உள்ளது. இதையும் குறைத்தால் மிகப்பெரும் அளவிற்கு பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் வருவாய் இழப்பு தவிர்க்கப்படும்.


தற்போது விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ.14.35-ம், ஒரு லிட்டர் டீசல் விலையில் 4.60-ம், கலால் வரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரியை குறைத்தாலே விலை உயர்வு தானாக தவிர்க்கப்பட்டு விடும்.

மக்களை மறந்த மத்திய அரசு இதனை கண்டு கொள்ள மறுக்கிறது. மக்களை திரட்டுவோம்-வெற்றிபெறுவோம்.

சென்னை நகரின் வளர்ச்சி-விரிவாக்கம்- மக்களின் வாழ்வாதரம் கருத்தில் கொள்ளுமா? தினமணி

(சில தினங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியான திருமுல்லைவாயல் அராபத் ஏரி பகுதியில், பயன்படாத நிலத்தில் இருந்த குடியிருப்புகளை வருவாய்துறை அகற்றியது. இதனை அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையாக எதிர்த்தது. இந்த பகுதியை தொடர்ந்து வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை அகற்ற வருவாய் துறை முயற்சித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைபாட்டால், நடத்திய போராட்டத்தினால், குடியிருப்புகளை அகற்றும் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தினமணியில் வந்துள்ள செய்திக்கு விளக்கம் என்ற வகையில்.............)

மே-21 நாளிதழில் ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற கட்சிகள் எதிர்ப்பது ஏன்?’ என்று தலைப்பிட்ட செய்தி ஒன்றை தினமணி நாளேடு வெளியிட்டுள்ளது.“நீர் நிலை புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போட்டு லாபம் பார்த்த அரசியல் பின்னணி கொண்ட ரியல் எகுடேட் அதிபர்களே, கட்சித் தலைவர்களை தங்களுக்கு ஆதரவாக போராட அழைத்து வருவதாக...” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எந்த ரியல் எகுடேட் அதிபர் எந்த தலைவரை அழைத்து வந்தார் என்பதை கூற வேண்டியதுதானே? அந்த இடங்களை வளைத்து, விற்ற ரியல் எகுடேட் அதிபர்கள், அதற்கு துணைபோன வருவாய், பத்திரப்பதிவு, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தினமணி வலியுறுத்த மறுப்பது ஏன்?

“மக்களுக்கும், அரசுக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் சிலர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தங்கள் பணியை பாதிப்பதாக வருவாய் துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்” என்று கூறும் தினமணி, இவ்வளவு பாதிப்புக்கும் காரணம் இந்த வருவாய் துறையினர்தான் என்பதை எங்கும் குறிப்பிடாதது வர்க்கப் பாசத்தைதான் காட்டுகிறது.

மேலும் அந்த பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணம் கொடுத்து இடம் வாங்கியவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறும் விந்தை தினமணிக்கு தவிர வேறு எந்த பத்திரிகைக்கும் வராது.

ஆக்கிரமிப்பு என்று சொல்லக்கூடிய திருமுல்லைவாயல் அராபத் ஏரி, அம்பத்தூர் கொரட்டுர் ஏரி, திருவேற்காடு அயனம்பாக்கம் ஏரி, பல்லாவரம் ஏரி ஆகியவை இதுவரை குடிநீருக்காக பயன்படுத்தாத பகுதியாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளை மண் பரிசோதனை செய்த அதிகாரிகள், இந்த நீர்நிலைகளை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது என்று கூறியதை எப்படி தினமணி மறந்ததோ தெரியவில்லை.

ஆங்கிலேயர் காலத்து ஆவணங்களில் நீர்நிலை என்று குறிப்பிட்டுள்ளவைகளில், பெரும்பாலானவை தனது பயன்பாட்டை இழந்துள்ளன பல காலங்கள் ஆகின்றன. அந்த இடங்களில் 30-40 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது. அவர்களிடமிருந்து அனைத்து வகையான வரிகளையும் வசூல் செய்து, அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போது சென்ற காலி செய் என்றால் எங்கு செல்வது? மாற்று இடம் என்ற பெயரில் இருக்கும் இடத்தை விட்டு 75 கிலோமீட்டர் தூரம் செல்லச் சொன்னால் வாழ்வாதரம் பாதிக்காதா?

சென்னை நகரில் சிஎம்டிஏ அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதில் உள்ள சிரமங்களை புரிந்து கொண்டு அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதேபோல் 5ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு குடியிருப்புகளை இடிப்பது மனிதாபிமான செயலா?

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், சென்னை நகரின் வளர்ச்சி-விரிவாக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டும், பயன்படாத நீர்நிலைப் பகுதிகளை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.

ஏதோ அரசுக்கும் ஒரு அரசியல் கட்சிக்கும் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்) இடையே உள்ள பிரச்சனை என்பதுபோல் செய்தி உள்ளது. இது ஒரு அரசியல் கட்சியின் பிரச்சனையல்ல: மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதை தினமணி நாளேடு உணர வேண்டு

403.3 டன் தங்கம் விற்பனைக்கு

........................................................................................................ கட்டுரையாளர் - தோழர் சக்தி

சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். (IMF) தன் வசமுள்ள தங்கத்தில் 12 சதத்தை விற்பதென முடிவு செய்துள்ளது. 1994ம் ஆண்டு பிரட்டன்வுட்ஸ் நகரில் துவங்கப்பட்ட ஐஎம்எப்-ன் நோக்கம் நாடுகளின் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியை அதாவது வர்த்தக பற்றாக் குறையை (TRADE DEFICIT) ஈடுசெய்வதே என்று சொல்லப்பட்டது. ஆனால் வளரும் நாடுகளை தங்கள் கடன் வலையில் வீழ்த்தி அந்நாடுகள் மீது கடும் நிபந்தனைகளை சுமத்தி, நாடுகளின் இறையாண்மையை பறிமுதல் செய்யும் ஏகத்திபத்திய கருவியாக உலக வங்கியும் ஐஎம்எப்பும் நடை முறையில்செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐஎம்எப் தன் வசமுள்ள தங்கத்தில் ஒரு கணிசமான பகுதியை விற்பதென முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 403.3 டன் எடையுள்ள தங்கத்தை ஐஎம்எப் விற்க இருக்கிறது.

இதன் மதிப்பு சுமார் 11 பில்லியன் டாலர் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1000 அமெரிக்க டாலர்களை தண்டிவிட்டது. ( ஒரு அவுன்ஸ் என்பது சுமார் 28 கிராம், அதாவது முன்றரை பவுன்), ஆனால் ஒரு அவுன்ஸ் 850 டாலர் விலையில் விற்கலாம் என்ற மதிப்பிட்டிலே 11 பில்லியன் டாலர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிடாத ஒரு ஐஎம்எப் அதிகாரி கூறிஇருக்கிறார்.

இந்த நிதியைக் கொண்டு நிதியத்தின் நிதியதரத்தை மேம்படுத்தவும், பலவிதமான புதிய முதலிடுகளை மேற்கொள்ளவும், மேம்பட்ட முறையில் வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டுருப்பதாக ஐஎம்எப்-ன் நிர்வாக இயக்குநர் டாம்னிக் ஸ்ட்ராஸ் கான் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த அளவிற்கு ஐஎம்எப் இறங்கிவர முக்கிய காரணம், வெனிசுலா அதிபர் சாவேஸ் உலக வங்கிக்கு மாற்றாக 'தென்புல நாடுகளின் வங்கி' என்ற அமைப்பு தோற்றுவித்தது தான். இந்த வங்கி நிபந்தனையற்ற கடன்களை மூன்றாம் உலக நாடுகள் பெற வழிவகுக்கும் யோசனையை முன் வைத்திருப்பதும், தென் அமெரிக்க கண்டத்தில் அர்ஜென்டினா, ஈக்வடார் போன்ற நாடுகள் ஐஎம்எப்பிலிருந்து வெளியேறியது இன்னொரு முக்கியமான காரணம்.

ஐஎம்எப் தனது தங்கத்தை விற்பனை செய்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் அனுமதி வழங்க வேண்டும். அப்படியே அனுமதி கிடைத்தாலும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் இல்லாமல் தனது தங்கத்தை விற்க முடியாது.

சரி, சுமார் 403.3 டன் தங்கம் சந்தையில் திடீரென்று குவிந்தால், தங்கத்தின் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பும் நியமானது தான். ஆனால் இன்றைய சர்வதேச பொருளாதாரச் சூழலை உற்று நோக்கினால், தங்கத்தின் விலையில் பெரும் வீழ்ச்சி நிகழாது என்றே தோன்றுகிறது. 403 டன் தங்கத்தையும் ஒரே நாளில் ஐஎம்எப் விற்கப் போவதில்லை. அதை ஒரு குறிப்பிட்ட காலஅளவுக்கு நீடித்த வகையில் தான் செய்யப்போகிறது என்பது ஒரு காரணம்.

இன்னொன்று நீதி மூலதனத்தின் லாபத் தேவைகளை பங்கு சந்தை தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆகவே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர். அதனால் மேலும் தங்கத்தை வெளியிடுவதன் மூலம் தங்கம் விலை உயரத்தான் வாய்ப்பு உள்ளதே தவிர குறைய வாய்ப்பு இல்லை.