கூட்டலும் கழித்தலும்

செம்மலர் இரா சிந்தன

நெஞ்சம் கனத்து அழுகும்
விவசாயியின் கண்ணீர் கண்டு

"அவன் நிலைக்கு அவனே காரணம்"
என்று பரிகசிப்பாய் நீ

"பாவம்" என்பார் சிலர்

"சுயநலக் கூட்டத்தின்
சுந்தர லீலை இது"
என்பேன் நான்

உனக்கும் எனக்கும்

கேள்விகள் ஒன்றுதான்

பதில்கள் தான் வேறு

பதில்களில்தான் ஒளிந்திருக்கின்றன சூட்சுமங்கள்வாரம் எழுனாலும்
வயலில் உழுது உழுது
'வக்கற்றுப் போன' அவர்
வரலாறு தெரியுமெனக்கு

அவர் கண்ணீர் கடலில் கரிக்கும்

உட்கார்ந்த இடத்திலிருந்து
'ஊக வணிகம்' செய்து
கோடிகளை கொள்ளையடிக்கும்
கும்பலையும் தெரியுமெனக்கு

அவன் வாழ்க்கை கோடியில் கொழிக்கும்

நெஞ்சில் ஈரமில்லா
நீச மேதைகளோ
இதற்க்கு இட்ட பெயர்
அறமான "smart work"

உருவாக்கும் கரங்களுக்கு
உண்டாகும் துரோகத்துக்கு
நாங்கள் வைக்கும் பெயர்
அற்பமான "fraud work"

"போர்" அடித்து கால் வலித்து
இளைப்பாறித் திரும்புகையில்
அப்படியே இருக்கும் கதிர்

பொத்தானை அழுத்தியதும்
பாதியாய்க் குறையும்

கூட்டிக் கழித்துப் பார்க்க
'உலக்கையும்' அடகு போகும்

உழவா ..

உன் கணக்கை கூட்டி
உனக்கான போர் தொடங்கு

உன்தலைக்கு விலை பேசும்
அரசியல் கூட்டோடு
கால்களில் கடித்துரிஞ்சும்
அந்த 'அட்டை'களைக்
கழித்துப் பார்
கணக்கு சரியாய் வரும் ...
செங்கொடி உன் கூட வரும் ...

Global Warming

ஜேம்ஸ் ஹான்சன்: அறிவியலின் மனசாட்சி

 

மோனிகா

 

முனைவர் ஜேம்ஸ் ஹான்சன் இயற்பியல் ஆய்வாளர். நாஸா கோடார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற ஆய்வகத்தின் இயக்குனர். இந்த அமைப்பு கோடார்ட் விண்வெளி பயண மையம் என்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவி நிறுவனத்தின் (Earth Institute) அங்கமாகும். இவர் இருபதாண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 23, 1988) அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) புவி வெப்பமடைகிறது என்று சாட்சியமளித்தன் மூலம் இப்பிரச்சினை குறித்து பொது மக்கள் கவனத்தை ஈர்த்தவர். இவர் சென்ற ஜூன் மாதம் அமெரிக்க செனட் உறுப்பினர்களின் விசேஷ குழுவின் முன் “இருபதாண்டுகளுக்குப்பின் புவி வெப்பமடைதல்: கவிழ் புள்ளிகளின் (Tipping Points) அருகாமையில்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை சுருக்கமாகவும், தெளிவாகவும் பிரச்சினையின் தீவிரத்தை சுட்டுகிறது.

http://www.columbia.edu/~jeh1/2008/TwentyYearsLater_20080623.pdf அவரது உரையிலிருந்து: “மீண்டும் புவி வெப்பமடைதல் என்ற நிகழ்வுக்கு தொடர்புடைய அறிவியல் சமூகத்திற்கும், கொள்கை வகுப்பாளர்கள்-பொதுமக்களுக்குமிடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அன்று போலவே இன்றும் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எட்டப்படும் முடிவுகள், அரசியல் சமூகத்திற்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன. இன்றும் இந்த முடிவுகள் 99 சதவிகிதத்திற்கும் அதிகமாக உறுதியானவை என்று என்னால் சான்று பகர முடியும் …பண்பாடுகள் தோன்றி வளர்ந்த இவ்வுலகென்ற படைப்பை காப்பாற்றுவதற்கு தேவையான மாற்றங்கள் என்னவென்பது தெளிவு. ஆனால் குறுகிய லாப நோக்கங்களைக் கொண்ட ஆதிக்க சக்திகள் வாஷிங்டனிலும், பிற தலைநகரங்களிலும் கோலோச்சுவதால் இம்மாற்றங்கள் நிகழாவண்ணம் தடுத்து வருகின்றன… எரிபொருள் கம்பெனிகளின் தலைவர்கள் (CEOS) தங்கள் வர்த்தக நடவடிக்கைகளின் நீண்ட கால விளைவுகளை நன்கறிந்துள்ளனர்.

என் பார்வையில் இவர்கள் மானுடத்திற்கும் இயற்கைக்கும் எதிரான குற்றங்களுக்காக குற்றவாளிக் கூண்டிலேற்றப்படவேண்டும்.” கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று Democracy Now என்ற செய்தி நிறுவனம் ஒரு நேர்காணலை நிகழ்த்தியது. ஜேம்ஸ் ஹான்ஸனின் பத்திரிகைக் குறிப்புகளை வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு அதிகாரிகள் தொடர்ந்து தணிக்கை செய்ததும், அவரை ஊடகங்களில் உரையாட அனுமதிக்காததையும் குறித்த விவரங்களை ஹான்சனும், Censoring Science: Inside the Political Attack on Dr.James Hansen and the Truth of Global Warming என்ற நூலை எழுதியுள்ள மார்க் போவனும் (Mark Bowen) அந்த நேர்காணலில் விரிவாக பதிவு செய்துள்ளனர். www.democracynow.org/2008/3/21/ எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என விட்டுவிட முடியாது. ஏற்கனவே காலம் கடந்துவிட்டதோ என்றுதான் அறிவியலாளர்கள் சிந்திக்கின்றனர். ஜான் ஹோல்ட்ரன் (John Holdren) என்ற விஞ்ஞானி புவி வெப்பமடைதல் என்று கூறுவதைவிட புவியை ஊறுசெய்தல் (Global Disruption) எனக்கூறுவதே பொருந்தும் என சென்ற வாரம் கூறியுள்ளார். ஜேம்ஸ் ஹான்சனின் உரை மற்றும் வேறு சில பதிவுகளிலிருந்து திரட்டிய சில தகவல்களை இங்கே தருகிறேன். அடிப்படை தகவல்களாக இருந்தாலும் என் போன்று இப்பிரச்சனைக்கு அறிமுகம் பெறுபவர்களுக்கு உதவியாக இருக்கலாம். ஹான்ஸன் 2006ம் ஆண்டு மக்களின் கவனத்தை கவரும் வகையில் ஒரு அறிக்கையை முன் வைக்க வேண்டி, “விலங்கினங்கள் குறைந்து வருகின்றன: தாவரங்கள் இடம் பெயர்கின்றன” என்ற வாக்கியத்தை தனது ஆய்வு முடிவாக வெளியிட்டார்.

மனிதர்கள் வசதியாக வாழ்கின்ற காரணத்தால் (மேலைநாடுகளில்!) தினசரி ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களை அவர்கள் சரிவரக் கவனிப்பதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பநிலையை நம்பி மட்டுமே வாழக்கூடிய தாவரங்களும் விலங்கினங்களும் தற்போது பெருஞ்சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. இப்புவி வெப்பமடைதல் எப்படி ஏற்படுகிறது? பூமி சூரிய கதிர்கள் மூலம் வெப்பமடைவதும் சமநிலையை பராமரிக்கும் வகையில் அதே அளவு வெப்பம் பூமியிலிருந்து வெளியேற்றப்படுவதும் இயற்
கை.
சூரிய ஓளி அதிகமாதல், எரிமலைக் குமுறல்கள் போன்ற இயற்கை நிகழ்வுகள் ஓரளவுக்கு வளிமண்டலத்துக்கு செல்லும் வெப்பத்தை அதிகரிக்கலாம். ஆனால், பெருமளவில் இந்த அதிகரிப்பு துருவப் பிரதேசங்களுக்குள் ஊடுவிச் செல்லும் வளிமண்டலத்திலுள்ள பச்சை இல்ல வாயுக்களான மீத்தேன், கார்பன்- டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை இவ்வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதனால்தான் ஏற்படுகிறதென்று பண்டைய நிலவியல் தட்பவெப்ப (paleo climatic/ past geolithical climatic) ஆய்வுகள் கூறுகின்றன. பூமியும் கடலும் அதிவெப்பமடைய இவையே காரணமென அந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. கிட்டத்தட்ட 943 வகை விலங்கினங்கள் தம் தகவமைப்பை மாற்றிக் கொண்டுள்ளன. துருவப்பிரதேசமான அண்டார்டிகாவில் அடிலி, எம்பரர் பென்குயின் போன்ற விலங்கினங்கள் குறைந்து வருகின்றன. பனிப்பாறைகள் உருகுவதால் துருவக்கரடிகள் சீல்களை வேட்டையாட முடியாமல் போகவே இருபது சதவிகிததுக்கு மேல் குறைந்துவிட்டன. இவ்வுயிரனங்களின் இருப்பு மானுட இருப்புடன் தொடர்புடையது. இம்மாற்றங்களுக்கு மூல காரணமாகிய கார்பன்- டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் மூன்றில் ஒரு பங்கு விலங்கு மற்றும் தாவிர இனத்தையும் நம்மில் இலட்சக் கணக்கானவர்களையும் இழக்க நேரிடும்.

உலகெங்கும் வியாபித்துள்ள தொழில்மயமாதல் என்னும் பேய் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றை ஆக்கிரமித்துக் கொண்டமையால் லண்டன் நகரமே படிவத் திரவங்களின் புகையால் உழன்றது, அமெரிக்காவில் ஒரு ஆற்றையே தீக்கிரையாக்கியது, காடுகளை அமில மழையால் ஆழ்த்தியது. வெப்பமடைதல் பிரச்சினை நம்மை முற்றும் முழுவதும் பீதியிலாழ்த்தும் வரை நாம் இதற்கு விடை தேடப்போவதில்லை. ஆனால் நின்று, நிதானித்து சரிசெய்துவிடலாம் என்று நம்புவதற்கு இடமில்லாத ஒரு இக்கட்டான சூழலில் இன்று நாம் இருக்கிறோம். காரணம் 350ppm க்கு குறைவாக இருக்க வேண்டிய கார்பன்-டை ஆக்ஸைடின் அளவு ஏற்கனவே 385ppm ஆக உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் போனால் அது வருடத்திற்கு 2ppm அதிகரித்துக் கொண்டேபோய் தற்போது எஞ்சியுள்ள படிவத் திரவங்கள் (fossil fluids), எண்ணெய், கரி, கச்சாப் பொருட்களான தார்மணல், மீத்தேன் ஹைட்ரேட், கடின எண்னெய்கள் போன்ற எரிபொருள் முழுவதும் எரிவதால் எட்டக்கூடிய 450ppm அளவை விரைவில் அடைந்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழி வெப்ப அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அல்லது 3.6 fahrenheit குறைப்பதுதான். அப்படி செய்வதன் மூலம் உடனடி நாசத்தை தவிர்க்கலாமே தவிர தீர்வை சென்றடைந்துவிட முடியும் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் கார்பன்-டை ஆக்ஸைடு உமிழ்வை நிறுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை தொழில் நிறுவன அதிபர்களின் கைக்கூலிகளாக இருக்கும் நமது அரசாங்கங்கள்தான். அதிலும் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கு அளவிலடங்காதது. துந்திரப் பிரதேச தட்பவெப்ப மண்டலங்கள் ஏற்கனவே துருவங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்
டன.
இது கிட்டத்தட்ட 250 மைல்களை தாண்டிவிட்டது. தெற்கு அமெரிக்கா, பூமத்திய ரேகைப் பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்கப் பகுதிகள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளன. கார்பன்- டை ஆக்ஸைடு வளர்ச்சியை கட்டுப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வராவிட்டால் காட்டுத்தீயும், ஏரிகள் வரண்டு போவதும் வழமையாகிவிடும். பனிமலைகளிலிருந்து வரும் நல்ல தண்ணீரை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இமயமலை, ஆண்டஸ், ராக்கி மலைத்தொடர்களின் நீராதாரங்கள் வற்றிக் கொண்டு வருகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக எழும் ஹைட்ராலஜிக் சுழலால் வெள்ளங்களும் பஞ்சங்களும் அதிகரிக்கும். ஆழ்கடலிலுள்ள பவழப்பாறைகளும், மழைக்காடுகளும் மூன்றிலொரு பங்கு கடல் வாழ் விலங்கினங்களின் உரைவிடமாக விளங்குகின்றன. கார்பன்- டை ஆக்ஸைடு அதிகரிப்பால் கடல் நீருடன் அமில மழைக்கலப்பு ஏற்பட்டு இவை பழுதடைந்து வருகின்றன. எங்கெல்லாம் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் கார்பனை தக்கவைத்து பூமிக்குள் திருப்பி அனுப்புவதன் மூலம் புவி வெப்பமடைவதை தவிர்க்கலா
ம்.
வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எண்ணெய்களிலிருந்து கார்பனை பிரித்தெடுப்பது கடினம். அதுமட்டுமல்லாது எண்ணெய்களின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தொடர்ந்து எரிபொருள் சக்தியை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமானால் இனி அது நிலக்கரியிலிருந்து எண்ணையை பிழிந்து எடுப்பதன் மூலமோ, படிவத் திரவங்களின் மூலமோ சாத்தியம் இல்லை. அவற்றின் முடிவை நாம் மிக விரைவில் சென்றடைய இருக்கிறோம். எண்ணெயின் விலை உயர இதுவும் ஒரு முக்கிய காரணம். மறு உற்பத்திக்குப் பயன்படக்கூடிய எரிபொருள் சக்தி மூலங்களை கண்டடைவதை விட்டு விட்டு எண்ணெய் நிறுவன ஜாம்பவான்கள் புவி வெப்பமடைவதைப் பற்றின ஐயப்பாட்டினை உண்டாக்குவது “புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு” என்று நமது சிகரட் பெட்டிகளின் மீது விளம்பரப்படுத்துவதை போன்ற
து.
அரசியல் வாதிகளை அவர்கள் பகடைக்காய் ஆக்கிவிட்ட நிலையில் மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும். கடைசி சொட்டு வரை நிலத்திலிருந்தும், கடலுக்குள்ளுமிருந்து படிவத் திரவத்தைப் பிழிந்தெடுக்கத் துடிக்கும் சுய நலம் பிடித்த இந்த வர்த்தக நிறுவங்களை குடிமக்களாகிய நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும். நமக்கு அருகிலேயே நாம் உண்பதற்குத் தேவையான பயிர் விளையும்போதிலும் உலகின் மற்றொரு மூலையிலிருந்து அது கொண்டுவரப்படுகிறது. ரயில் வண்டியைவிடவும் விமானத்தில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகிவிட்டது. விமான தளங்கள் நம் வெளியூர் பேருந்து நிலையங்களைக் காட்டிலும் அதிக வாகன நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இது பெரு முதலாளிகளுக்கு எளிதில், மலிவான விலையில் படிவத்திரவங்கள் கிடைக்கின்ற காரணத்தினால்தான். கார்பன் வரியென்றும் கார்பனுக்கு 100% டிவிடெண்டும் விதிப்போமேயானால் அவர்கள் இப்போதையிலிருந்து தெளிவடைய வாய்ப்புண்டு. அதே நேரம் பொது மக்களாகிய நமக்கு அவர்கள் ஏற்படுத்தி வரும் நாசத்திற்கும் அவர்களை எவ்வாறு ஈடு செய்ய வைப்பதெப்படி என்று தெரியவில்லை. ஹான்சனின் எச்சரிக்கைகள் இப்படியிருக்க இதனிடையில் கடந்த ஜூன் 22ம் தேதி ஜெடாவில் நடைபெற்ற எண்ணெய் உற்பத்தியாளர் (Organisation of petroleum exporting companies)- வாடிக்கையாளர் கூட்டத்தில் நடந்த சூடான விவாதத்தில் எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு காரணம் போதிய அளவு உற்பத்தி நாடுகள் ஏற்றுமதி செய்யாததுதான் என்று வாடிக்கையாளர்களான (பெரும்பாலும்) மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்ட மற்றொரு புறம் உற்பத்தியோ, நுகர்வோ பெரிய மாற்றமடையாதபோது போன வருடம் 70$ ஒரு பேரலாக இருந்த பெட்ரோல் இப்போது 140$ ஆக மாறக் காரணம் என்ன என்று பி.சிதம்பரம் குரலெழுப்பியுள்ளார். இந்த சர்ச்சையில் தெரிய வந்தது என்னவென்றால், பெட்ரோலியத்தில் முதலீடு செல்லும் பண முதலைகளுக்கும் அதன் உடனடி பயன்பாட்டுக்கும் எந்த உறவும் கிடையா
து.
அமெரிக்காவைச் சார்ந்த பெரிய நிதி நிறுவனங்கள், ஓய்வுப் பண வைப்பு நிதி நிறுவனங்கள், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் “எதிர்கால வர்த்தகம்” என்ற பெயரில் பெருவாரியான சரக்கை விலைபேசும் காரணத்தால் பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதென்பது ஒரு அசிங்கமான/கசப்பான உண்மை. உதாரணத்துக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆகும் என்பதை கணக்கிட்டுக் கொண்டு இப்போது 10 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலை முன் கூட்டியே 2 018 ஆண்டுக்காக நாற்பது ரூபாய் முன்பணமாக கொடுத்து வாங்கிவிடுவது. இழவு வீட்டில் பந்தலிலே பாவற்காய் என்று பாடுவது நினைவிற்கு வருகிறதல்லவா?

தெலுங்கானா ஆயுதப் போராட்ட வீரங்கணையின் தற்கால புரட்சிக் குரல்!

பதிவு செய்தவர்: வீராங்கனை மல்லுஸ்வராஜ்யம்
பதிவு நேரம்: 14 Jul 2008 01:03 pm
பெண்களும் ஆயுதமேந்தி போராடினோம்!
தெலுங்கானா வீராங்கனை மல்லுஸ்வராஜ்யம் பேட்டி
1930 ஆம் ஆண்டு நான் நல் கொண்டா மாவட்டம் கருவிரால் வட்டம் கொத்தகூடம் கிராமத்தில் பிறந்தேன். என் அப்பா எனக்கு ‘ஜூகுனு’ (மின்மினி) என்று செல்லமாய் பெயரிட்டார். எனது தாய்மாமா ஒரு காந்தியவாதி. உப்புசத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அவர்தான் எனக்கு சுதந்திரம் என்ற பொருளில் சுயராஜ்ஜியம் என்று பெயரிட்டார். எனது அண்ணன் நரசிம்ம ரெட்டி கம்யூனிஸ்டாக இருந்தார்.
1943ம் ஆண்டு விஜயவாடாவில் நடை பெற்ற கட்சி வகுப்புக்கு அண்ணன் என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது பதிமூன்று தான். அங்குதான் எனக்கு மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் கிடைத்தது. அந்த ஒரே நாவல் என்னை கம்யூனிஸ்டாக மாற்றிவிட்டது. என் அம்மாவும் அதைப்படித்தார். அவர் ஆந்திர மகாசபையில் சேர்ந்து அதன் பெண்கள் அமைப்பில் பணியாற்றினார்.
எங்கள் பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர். அம்மா தனது பெண்கள் அமைப்பின் மூலம் கோஷா எதிர்ப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண் குழந்தைக ளின் கல்வி மறுப்புக்கு எதிராக போரா டினார். அன்னை மற்றும் அண்ணனின் நடவடிக்கைகள் என்னைப்பதினான்கு வயதிலேயே புரட்சிக்காரியாக மாற்றியது. ஏழைகளை அடிமைகளாக நடத் துவது, அவர்களை சர்வசாதாரணமாக சாட்டையால் அடிப்பதைக் கண்டித்து ஆந்திர மகாசபை நடத்திய போராட் டங்களில் அம்மாவுடன் நானும் இணைந்து கொண்டேன். விவசாயிகள் நிலம் கோரிப் போராடினர். கம்யூனிஸ்டுகள் அக்காலத்தில் ஆந்திர மகாசபை மூலமே போராடினர்.
நிலப் பிரபுக்களின் அட்டூழியம் அதிகரித்தது. தொட்டி குமரய்யா கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து 1946ல் ஆயுதம் தாங்கிப் போராடுவதென கட்சி முடிவு செய்தது. கட்சியின் முக்கிய ஊழியர்களுக்கு மேஜர் ஜெய் பால்சிங் ஆயுதப்பயிற்சியளித்தார். அதில் நானும் பங்கேற்றேன். பின்பு நானும் பெண்களுக்கு ஆயுதமேந்தவும், சுடவும் பயிற்சியளித்தேன். தோழர் பி.சுந்தரய்யா புரட்சிக்கு ‘மக்களை எழுப்புக’ என்ற கோஷத் தைக் கொடுத்தார். ரவிநாராயண் ரெட்டி, எல்ல ரெட்டி, ரபிஅகமது, வாவிகோபாலகிருஷ்ணையா ஆகியோருடன் என்னையும் பிரச்சாரக் குழுவில் இணைத்தார்.
சென்னை முதல் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் வரை ஆடல் -பாடல் கலை நிகழ்ச் சிகள் மூலம் பிரச்சாரம் செய்தோம். அப்போது சென்னையிலிருந்த தெலுங்கு சினிமா நடிகர்களும், சினிமா இயக்குநர்களும் தங்க இடமளித்து உதவினர். எனது ‘உய்யாலா’ பாடல்கள் மக்களைக் கவர்ந்தன. நானே எழுதிப்பாடுவேன். பின்பு மேடைகளிலும் கிராமங்களிலும் உய் யாலா பிரபலமாகிவிட்டது. மக்களை எழுப்புவதில் எனது கலைப்பணியை பல தோழர்கள் பின்பற்றினர். பின்பு நான் பிண்டிபோல் வனப்ப குதியில் மானு கோட்டை வட்டாரத் தில் பெண்கள் படையை திரட்டி அவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தேன். முந்நூறு பேர் கொண்ட பெண்கள் படையில் இரு நூறு பேர் மலைவாசிப் பெண்களாவர். அதன் பின் நான் கொரில்லா ஆர் கனைசராக்கப்பட்டேன்.
எங்களுக்கு கமாண்டராக மல்லுவெங்கட நரசிம்ம ரெட்டி என்பவர் இருந்தார். முடிவுகள் எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலும் அவர் மிகத்திறமை யானவர். ஐதராபாத் நிஜாமின் படை களை விரட்டியடித்தோம். ஒவ்வொரு தளமாகக் கைப்பற்றி முன்னேறினோம். பத்து லட்சம் ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி நிலங்களைப் பிரித்து விவசாயிகளுக்குக் கொடுத் தோம். போரில் ராஜக்கா என்ற கொரில்லா வீராங்கனை சுட்டுக் கொல் லப்பட்டார். எனது தலைமறைவு வாழ்க்கையில் அந்த புகழ்மிக்க வீராங்கனையான ராஜக்கா என்ற ஒரு பெயரையே சூட்டிக்கொண்டேன். குதிரை மீது ஏறி போர்க்களங்களைச் சுற்றி வந்தேன். கம்மம், வாரங்கல் பகுதி முழுவதும் நான் ராஜக்காவாகச் சுற்றி வந்தேன். சுந்தரய்யா என்னை ஜான்சிராணி போல் தோன்றுவதாக கூறி பாராட்டினார். என்னைக் காட்டிக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று நிஜாம் அரசு அறிவித்தது.
1947ல் சுதந்திரம் கிடைத்தது. நேரு தலைமையில் ஆட்சி வந்தது. ‘நிஜாம் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும், நாங் கள் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்த நிலங்களைப் பறிக்கக் கூடாது, கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய கிராமராஜ்யங்களை அங்கீகரிக்க வேண்டும்’ என்று நேருவிடம் கோரி னோம். நேரு வாக்குறுதியளித்து விட்டு துரோகம் செய்தார். 1948 செப்டம்பரில் ஐம்பதாயிரம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தை எங் கள் மீது ஏவினர். எங்கள் கட்சியின் கட்டளையை ஏற்று நாங்கள் ஆயுதங் களைக் கீழே வைத்தோம்.
இந்திய ராணுவம் எங்கள் தோழர்களை ஆயிரக்கணக்கில் சுட்டுக் கொலை செய்தது. 6000 பேர் படுகொலை செய்யப் பட்டனர். முப்பதாயிரம் பேர் குற்றுயி ரும் குலைஉயிருமாக சிதைக்கப்பட் டனர். எங்கள் கிராமராஜ்யங்களை அழித்து, விவசாயிகள் பகிர்ந்தெடுத்த நிலங்களைப் பறிமுதல் செய்து மீண்டும் நிலப்பிரபுக்களிடமே ஒப்ப டைத்து காங்கிரஸ் ஆட்சி அக்கிரம தாண்டவமாடியது. எங்கள் தெலுங்கானாப் புரட்சி, காங்கிரஸ் கட்சியால் ரத்த வெள்ளத்தி லேயே மூழ்கடிக்கப்பட்டாலும் இந் திய அரசு நிலச் சீர்திருத்த உச்ச புச்சட்டத்தை கொண்டுவரவைத்தது. வினோபா போன்றவர்களைப் பூமி தான இயக்கம் துவங்க வைத்தது. தெலுங்கானாப் போராட்டத்தால் தான் உச்ச வரம்புச் சட்டம் வந்தது. ஆனால் நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேயில்லை. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநில அரசுகளைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவ சாயிகளுக்கு நிலம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி அன்று முதல் இன்று வரை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
வளர்ச்சியின்றி தேசம் தேங்கி நிற்கிறது. நிலப்பிரபுத்துவம் தகர்க்கப் பட்டு நில வினியோகம் நடைபெறா மல் நாடு முன்னேறாது. உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய நிலங்களை பத்துமடங்கு விலை கொடுத்து அபகரித்து கார்ப்பரேட் விவசாயம் செய்து வருகிறது. வாழ வழியின்றி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரு கிறது.
மதவெறியர்கள் சனாதனத்தைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். ஆண்டான் அடிமைத்தனம், பெண் அடிமைத் தனத்தையும் நிலைநிறுத்த முயற்சிக்கி றார்கள். இதற்கெதிராக பெண்களும் ஆண்களும் இணைந்து போராட வேண்டும். சமூக விரோதிகளை எதிர்த்துப் போராட பெண்கள் பயிற்சி பெற வேண்டும். ஆயுதப் போராட் டமே வழி என்பது வெறும் கூக்குரல் தான். நாங்கள் அதை நடத்தியவர்கள். இன்றைய கடமை மக்களை ஜன நாயக முறையில் வெல்வதுதான்.
1954ல் தோழர் ராஜேஸ்வரராவ் எனக்கும் கமாண்டர் மல்லு வெங்கட நரசிம்ம ரெட்டிக்கும் திருமணம் செய்து வைத்தார். அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிலிருந்து செயல்பட்டார். 2004ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். நான் ஆந்திர மாநிலக்குழுவில் பணியாற்றி வருகிறேன். 1981 முதல் 2007 வரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவராய் செயல் பட்டேன். எனது பணி இன்றும் தொடர்கிறது. எனக்கு 78 வயதாகி விட்டாலும் மார்க்சியம் வென்றே தீரும் என்ற நம்பிக்கையுடன் பணி யாற்றுகிறேன். அது உயிருள்ள வரை தொடரும்.

இடதுசாரி அரசியலும் - நமது கடமையும்

டந்த 61 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏகபோக முதலாளித்துவ பாதை, இன்று ஒரு அபாயகரமான திருப்பத்தை அடைந்திருக்கிறது. இதற்கு மாற்று சக்தி என்று ஊடகங்களால் முன்னிறுத்தப் படும் பா.ஜ.க வின் வகுப்புவாத, குஜராத் "மாதிரி" (model) யும், சந்தர்ப்பவாத கர்நாடக "மாதிரி" யும் காட்டும் பாதை, நம் தேசத்தை பின்னோக்கி இழுத்து அழிவுக் குழியில் தள்ளுவதாக இருக்கிறது.

இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சற்று கவலையோடு கவனித்தால், எப்படியாவது, எல்லாவித சித்து விளையாட்டுக்களையும், குதிரை பேரங்களையும் செய்து, ஆட்சிக் கட்டிலில் ஒட்டிக்கொண்டு ஏகாதிபத்தியத்தின் "இளைய பங்காளியாக" இந்தியாவை மாற்றி, நமது தேசத்தின் சுயேச்சையான செயல்பாடுகளை காவு கொடுக்க துடிக்கிறது காங்கிரஸ். இந்த இக்கட்டான நிலையை எப்படியாவது தனக்கு சாதகமாக்கி, நாட்டை அந்நியனிடம் அடகு வைப்பது மட்டுமில்லாமல், மக்களை வகுப்பு ரீதியாக பிரித்து அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து நிரந்தர அடிமை ஆக்கும் தனது "பாசிச" திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது பா.ஜ.க.

இதுவரை அறிந்திராத எந்த ஒரு கொள்கைகளுக்காகவும் இவர்களை நாம் எதிர்க்க தேவை இல்லை,

பண வீக்கம் இரட்டை இலக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்த போதே , பெட்ரோலிய விலை உயர்வையும் மக்கள் மீது சுமத்தி ஒன்றும் தெரியாதவன் போல் "மந்திரக் கோல்" இல்லை என அறிவிக்கிறது காங்கிரஸ். இந்த செயல் பாடுகளுக்கு எந்த ஒரு எதிர்ப்போ , மாறு திட்டங்களோ சொல்லாத பா.ஜ.க, மக்கள் நலத் திட்டங்களையும் மத பிரச்சினை ஆக்கி எப்படியாவது அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க. ஏழை நடுத்தர மக்களை கொஞ்சமும் சிந்திக்காத - இவர்களின் இந்த செயல்பாடுகளே போதும் இவர்கள் நம் எதிரிகள் என்று இனம் கண்டறிவதற்கு.

பண பலமும், அதிகார பலமும் கொண்ட இந்தக் கூட்டத்திடமிருந்து, ஏழை நடுத்தர மக்களை பாதுகாப்பதற்காக அவர்களின் ஒவ்வொரு செயல் பாடுகளையும் ஆக்காவபூர்வமான வகையில் விமரிசித்தும், எதிர்ப்பு காட்டியும் வந்திருக்கிறார்கள். இன்று இந்த நிலை ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து நிற்கிறது. உலகம் முழுக்க இடதுசாரி அரசியலின் பக்கம் மக்களின் பக்கம் ஏழை நடுத்தர மக்கள் நம்பிக்கை வலுத்துவரும் நிலையில், இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத ஒரு மாற்று அரசியல் சக்தியாக அது வளரும் வாய்ப்புகளும் பிரகாசமாகிறது, எனவே பலரும் யார் அந்த இடதுசாரிகள் ஆர்வமோடு நோக்குவதும் தவிர்க்க முடியாதாகிறது.

பிரெஞ்சு புரட்சிக்கு பின் (1789) ஜனநாயக சக்திகள் முன்னேறிய காலத்தில், பிரெஞ்சு பாராளுமன்றம் காரசாரமான விவாதக் களமாக விளங்கியது. இந்த விவாதங்களில் பழமைவாதிகள் - சமுதாய மாற்றங்களை (முக்கியமாக தனிச் சொத்து மற்றும் அதன் அடிப்படையிலான மாற்றங்களை) கடுமையாக எதிர்த்தனர். அந்த பழைமைவாதிகள் சபாநாயகரின் வலது புற இருக்கைகளில் அமர்ந்தனர்.

இந்த சமுதாயக் கட்டமைப்பின் அடிப்படையே தவறு - அதனை அடிப்படையிலிருந்தே மாற்ற வேண்டும். மக்களுக்கு ஜனநாயம் கிடைக்க வேண்டும் என்றால் - அதிகாரம் படைத்தோர் - அடிமைகளை சுரண்டி சேர்த்த சொத்துகள் - மக்களுக்கு பொதுவான சொத்துக் களாக மாற வேண்டும் என்பது போன்ற புரட்சிகர கருத்துகளை முன்வைத்தவர்கள் சபாநாயகருக்கு இடது புறம் அமர்ந்தனர்.

புரட்சி எப்படி மன்னரை தூக்கி எறிந்ததோ - அது போலவே - மன்னரை ஒண்டி வாழ்ந்து மக்களை சுரண்டியவர்கள், அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறை என்று எல்லாத்துறைகளையும் தூக்கி ஏறிய வேண்டும் என்று வாதாடினர் அந்த இடது பக்கக் காரர்கள் .

இந்தக் காரணங்களால் - அரசியலில் - வழக்கத்திற்கு மாறான சிந்தனை கொண்டவர்கள் இடது சாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இன்றைய கட்டுக்கோப்பை மாற்றாமல் சில அடிப்படை விசயங்களை மாற்றுவதன் மூலமே நல்ல உலகம் அமைக்க மடியும் என்ற மிதமான கோசங்கள் கொண்டவர்களும் இதில் அடங்குவர்.

ஆனால
"இன்றைய சமுதாய அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்"

என்று பகிரங்கமாகவே அறிவித்து செயல்படுபவர்கள் கம்யுனிஸ்ட்கள். ஒருவன் மற்றொருவன் உழைப்பை தெரிந்ததே சுரண்டுவதன் மூலமாக வளருவதையும் , தான் சுரண்டப்படுவது தனது தலைவிதி என்று மற்றவர்கள் நம்புவதையும் - அடிப்படையிலிருந்தே மாற்றி அமைப்பது, அதன் மூலம் ஏற்ற தாழ்வற்ற சமுதாயத்தை நோக்கிச் செல்வதுதான் கம்யூனிஸ்ட்கள் லட்சியம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப் பட்ட அந்த நாளிலிருந்து கம்யூனிஸ்ட்கள் தங்கள் இலக்கை ஓர்போதும் மறைத்து வேடம் போட்டதில்லை.

அமைதியாகவோ, தேவைப்பட்டால் பலவந்தமாகவோ இலட்சியத்தை அடையத் தயாராக இருப்பது மட்டுமின்றி எண்ணற்ற தியாகங்களின் மூலம் வரலாற்றில் அதனை செயல் படுத்தியும் காட்டியவர்கள் கம்யூனிஸ்ட்கள். எனவே - எல்லா கம்யூனிஸ்ட்களும் இடதுசாரிகளே.

உலகம் முழுக்க பல நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார காலனிகளாக நாடுகள் மாற்றப்படும் முயற்சிகளுக்கு - வலதுசாரிகள் பெரும் ஆதரவு அளித்து வரவேற்பதால், உலக ஏழை, நடுத்தர மக்களில் வாழ் நிலையே கேள்வி குறியாகி இருக்கிறது. இதன் காரணமாக இன்றைய (உலக மற்றும் இந்திய) அரசியலில் இடதுசாரி - மற்றும் கம்யூனிஸ்ட் மாற்றி நோக்கிய பார்வை தவிர்க்க முடியாததாகி இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய போதிலிருந்து அது தனது செயல் பாடுகளை மக்கள் நலன் அடிப்படையிலானதாகவே கொண்டு - தீரம் மிக்க தியாகங்கள் செய்து வளர்ந்ததாகவே இருக்கிறது.

"பிரிடிஷ் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக எங்களை குற்றம் சாட்டுகிறீர்கள். நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம் இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் சதி செய்தோமென்று குற்றம் சாட்டினால் அதை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம்

ஆனால் நாங்கள் சதிகாரர் கள் இல்லை, பிரிடிஸ் ஆட்சியை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக சூளுரைத்து போராடிவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாங்கள்!
இந்த சதிக் குற்றச் சாட்டின்படி எங்களை தூக்கில் போட்டு கொன்று விடலாம் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை! தூக்கு மேடை எங்களுக்கு துரும்பு!"


சென்னை உயர்நீதி மன்றத்தில் தோழர் பி.ராமமூர்த்தி சூளுரைத்த வாசகங்கள் அவை. இவ்வாறு சென்னை சதி வழக்கு கோவை சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதிவழக்கு .. என்று கட்சி துவங்கிய துவக்க காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி மீது போடப்பட்ட சதி வழக்குகளும் , அடக்கு முறைகளும் ஏராளம்.

காங்கிரஸ் போல் அல்லாமல் - கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. அன்று ஆரம்பித்து - இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி முத்தாய்ப்பான கப்பல் படை எழுச்சியை காங்கிரஸ் எதிர்த்த போது - அந்த வீரர்களோடு களத்தில் இறங்கி உயிரையே பழி கொடுத்து சுதந்திர ஜோதியை காத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்

இறுதியில் கப்பல் படை வீரர்கள் சரணடையும் போது கூட
" நாங்கள் இந்தியாவிடம் சரணடைகிறோம், இங்கிலாந்திடம் அல்ல"

என்று அறிவித்தார்கள். கம்யூனிஸ்ட்கள் உறவு தந்த கர்ஜனை அது.

சுத்திரத்திற்கு பிறகு , உண்டியல் கட்சி, வேலை நிறுத்தக் கட்சி என்று கிண்டலாகவும், ஏளனமாகவும் அடையாளப் படுத்தப் படும் இடதுசாரிகள் உண்மையிலேய அந்த ஏளனப் பேச்சுக்களுக்காக பெருமைப்படுகிறார்கள்.

பெரும்பான்மை ஏழை, நடுத்தர மக்களுக்கு சார்பான அரசாக அமைய வேண்டுமானால் - அந்த இயக்கம் பெரும்பான்மை மக்களின் உதவியோடு வளர்வதே சிறப்பு - அவர்கள் உண்டியல் ஏந்தி மக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக சேகரித்து கட்சி நடத்துவதையும், ஏழை மக்களின் கண்ணீருக்காக அவர்களோடு வீதியில் இறங்கிப் போராடுவதையும் பெருமையாகக் கருதுவதும் - அந்த அரசு யாருக்காண அரசாக அமையும் என்பதன் வெளிப்பாடுகளே.

"சங்கமாக ஒன்று படு!
சளைக்காமல் போராடு!
சாணிப்பால் குடிக்க மறு
அடித்தால் திருப்பி அடி"


இதுதான் தஞ்சையில் கீழை தெருக்களில் - கீழ வெண்மணியில் விவசாய பணயார்களின் அடக்குமுறையை எதிர்த்த ஏழை மக்களுக்கு தோழர் சீனிவாசராவ் அளித்த போதனை. அவர்களின் கோரிக்கை
# சாணிப்பால், சவுக்கடி தண்டனை கூடாது
# அளவில் மோசடி செய்வதை தவிர்க்க முத்திரை இட்ட மரக்கால் பயன் படுத்த வேண்டும்


எங்களை மனிதனாக நடத்து என்று போராடிய அவர்களுக்கு கிடைத்த தண்டனையோ!

உலக வரலாறு பலமுறை கண்டது தான். ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைக் குரல் எப்படி கொடூரமான முறையில் அடக்கப் படும் என்பதற்கு மற்றும் ஒரு சான்று. ஒரு கூட்டத்தின் அதிகார வெறிக்கு - இன்று இராக் அழிகிறதே - அதன் இந்திய சான்று

மொத்தமாக 40 பேர், மூன்று வயது குழந்தை முதல் 80 வயது கிழவன் வரை - ஒரே குடிசையில் கதறக் கதற உயிரோடு எரித்து சாம்பலாக்கப் பட்டார்கள்.

இன்று அந்த கோரங்கள் தொடர்கின்றன - கம்யூனிஸ்ட்கள் போராட்டங்களும் தொடருகின்றன. விமர் சனங்களும், சுய விமரிசனங்களுமாக அந்த இயக்கம் உலைக்களத்தில் இட்ட இரும்பாய் மெருகேறிக் கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட்களும் இடதுசாரிகளும் மூர்க்கமாக எதிர்த்த GATT (உலகமயம், தாராளமயம்) ஒப்பந்தம் இன்று வரலாறு காணாத விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலைஏற்றம் போன்ற நாசகர விளைவுகளை நம் மீது ஏற்படுத்தியதும், நமது அன்றாட வாழ்க்கை செலவுகளையே சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளியதும் நினைத்து பார்க்க தகுந்தது. மக்கள் விரோத ஆட்சியாளர்களின் ஒற்றை கையெழுத்துக்கு நம் அன்றாட வாழ்க்கை பலியாவதை எதிர்த்து உறுதியாகப் போராடும் இடதுசாரிகளின் பின் திரண்டு மக்கள் வாழ்வை காப்பாற்ற வேண்டியது இன்று ஜனநாயக ஆர்வலர்களின், தேசபக்தர்களின் முன் இருக்கும் அவசரக் கடமையாகும்.

இந்தியப் பிரதமருக்கு ஒரு சாமானியனின் கடிதம்

மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு,

இந்தியா எனும் மகத்தான தேசத்தின் பிரதமாரான உங்களுக்கு ஒரு சாமானிய இந்தியப் பிரஜையின் வணக்கங்கள். பல
மதங்கள், பல இனங்கள் சேர்ந்து கட்டிய பூமாலையான நமது இந்தியாவில் வாழும் தேச பக்தன் என்பதே எனக்கு பெருமைதான். ஆனாலும் சமீப காலமாக நீங்கள் நடந்து கொள்ளும் விதம் என்னை சங்கடப் படுத்துகிறது.

மகாத்மா காந்தி படுகொலையில் ஆரம்பித்து இந்திய தேசத்தின் அமைதியை, அதன் ஒற்றுமையை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கு
வித்து, பிணங்களின் மீது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பா.ஜா.க வை கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அதன் “இந்தியா ஒளிர்கிறது” என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து வென்றீர்கள். உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் மீதான அதிருப்தியை இருந்தாலும் இந்திய மதச்சார்பின்மை தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று இடதுசாரிகளும் உங்களுக்கு ஆதரவு தந்தார்கள்.

அதன் பிறகு உங்கள் தலைமையிலான அரசு மக்களின் வாழ்வா
தாரப் பிரச்சினைகளில் “உணவுக்கு வேலைத் திட்டம்”, “கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம்”, “தகவல் அறியும் உரிமை” என சரியான பார்வையில் தான் ஒடிக் கொண்டிருந்தது. உங்கள் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது விமரிசனம் தந்துகொண்டிருந்த இடதுசாரிகளும் மக்கள் சார்பான நிலைப்பாடுகளையே தந்து வந்தார்கள். உண்மையை சொல்லவேண்டுமானால் நீங்கள் சரியான பாதையில் செல்வதற்க்கே அவர்களின் எச்சரிக்கைகள்தானே காரணம்?

அன்புக்குரிய பிரதமர் அவர்களே நாங்கள் வாங்கிகொண்டிருந்த 1/2 லிட்டர் பாலின் விலை 3.50 ரூபாயிளுருந்து 6.00 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. காய் சேர்ப்பது உடலுக்கு நல்லது என்று எனக்கு மருத்துவர் தினமும் அறிவுறுத்துகிறார். காய்-கரிகளோ பனை மரத்தில் காய்க்க ஆரம்பித்தது போல கைக்கு எட்டாமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றிர்க்கும் பணவீக்கம்தான் காரணம் என்று சொல்லுகிறார்கள். உங்களுக்கு தெரியாததில்லை.

இந்தியாவில் புதிதாக 23,000 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள். (அமெரிக்க அளவுகோள்படி ரூ. நான்கு கோடி வைத்திருப்பவர்கள் ,இதில் அவர்களது வீட்டு மதிப்பு சேராது) ஏற்கனவே இந்தியாவில் ஒரு லட்சம் கோட்டீஸ்வரர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மறுபுறத்தில் ஒரு நாளைக்கு ரூ. 40க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 35 கோடி பேரும், ரூ. 80க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 70 கோடி பேரும் உள்ளனர். ஒரு நாளைக்கு ரூ 100 வருமானமுள்ள குடும்பமே இப்படி தள்ளாடும் என்றால் ஒரு நாளைக்கு வெறும் இருபது ரூபாயில் குடும்பம் தள்ளும் மக்களின் நிலை?

இப்போது நீங்கள் அணுசக்தி உடன்பாட்டுக்கு காட்டும் இந்த உறுதிப் பாட்டை "பெட்ரோல் விலை உயர்வின் மீதோ" அல்லது "விலைவாசி உயர்வின் மீதோ" காட்டியிருந்தால் நாங்கள் சந்தோசப் பட்டிருப்போம்.


இத்தனைக்கு பிறக்கும் "நான் எங்கள் மீது கரிசனம் காட்டுங்கள்" என்று கெஞ்சுவதர்க்காக இந்தக் கடிதத்தை எழுதவில்லை.டாக்டர்.ஏ.கோபால கிருஷ்ணன் - இந்திய அணுசக்தி விஞ்ஞானி கூறுகிறார். நாட்டின் எரிசக்தியை நமது நாட்டில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு அமைத்துக்க் கொள்ளுவது முக்கியமானது என்று கூறுகிறார், நமது நாட்டுக்கு தெரிந்த தொழில் நுட்பத்தில் அதனை அமைத்துக் கொள்ளுவதே சிறந்தது என்றும் கூறுகிறார்.

அவர் சொல்லுவது போலவே 2006இல் 33 ஜிகாவாட
்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு அமைக்கப் பட்ட நீர் மின் உற்பத்தி நிலையாங்களை போல கூடுதலாக, மேலும் 55 ஆயிரம் மெகா வாட் நேபாளம் மற்றும் பூடானி லிருந்து நாம் இறக்குமதி செய்து நீர் மின் உற்பத்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக நம் தேவையை பூர்த்தி செய்யலாமே. ?

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவே
றினால், அணு ஈனுலை களை வாங்குவதற்காக, அமெரிக்க நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா அளித்திட வேண்டும். அதில் பாதியளவு மட்டும் செலவு செய்து, நம்முடைய எரிசக்திக் கொள்ளளவை அதிகரிக்க முடியுமில்லையா? அதோடு சேர்த்து ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கும் ஆறுகளையும் கட்டுப்படுத்தலாமே ?

இந்தியாவில் நிலக்கரி இருப்பு அபரிமிதமான அளவில் இருப்பதைக் திட்ட கமிசன் கண்டறிந்திருக்கிறது. இத்தனை கணக்கில் எடுத்துக்கொண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கலாமே ?

நம்மிடம் இந்த ஒப்பந்தம் போட துடிக்கும்
அமெரிக்கா, தன்னுடைய சொந்த நாட்டில், கடந்த முப்பதாண்டுகளில் ஓர் அணு ஈனுலையைக் கூட நிறுவிடவில்லை என்பது உங்களுக்கு தெரியாததில்லை? .

பின் ஏன் நாம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இந்த ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?

இன்றைய சூழலில், பல்துருவ உலகக் கோட்பாட்டை நோக்கிய சர்வதேச உறவுகள் அமைவதுதான் நமக்கு சாதகமாக அமையும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் விரும்பும் படி அதனை ஓர் ‘ஒருதுருவ உலகக் கோட்பாடாக’ மாற்றி அமைக்க முயற்சிக்கிறது, உலக நாடுகளை தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர காய் நகர்த்துகிறது. நீங்கள் நமது தேசத்தை அதற்க்கு பலியிடுகிறீர்கள். வளரும் நாடுகளின் தலைவனாக கடந்த காலங்களில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து செயல்பட்டு வந்த இந்தியா, உங்கள் தலைமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்துகொண்டு, ‘ஒருதுருவ உலகக் கோட்பாட்டை’த் திணித்தால், உலக அரசியலில் நமக்கு இருக்கும் தனித்தன்மை கரைந்து காணாமல் போய்விடும். இது இடதுசாரிகளின் நியாமான கோரிக்கை.

இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு, இராணுவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையிலும் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கும் , நம்முடைய அற்ப அளவிலான வள ஆதாரங்களையும் பெருமளவிற்கு வற்ற வைத்துவிடும் உண்மைதானே?


இந்தியா என்ற வளம் மிகுந்த தேசத்தில் வாழ்வில் பசையற்றுப் போய் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும். நாட்டின் வீதிகளில் கண்ணீர் துளிகளோடு பசியால் குழந்தைகள் பலர் மாண்டு விழுந்த போதும். வேலையின்மை, அறியாமை, வறுமை போன்ற கொடுமையான
வியாதிகளால் இந்திய தேசம் பீடிக்கப் பட்டிருந்த போதும், கசியாத உங்கள் கண்கள், சிந்திக்காத உங்கள் இதயம் விலை வாசி பணவீக்கம் பற்றி இப்போது மட்டும் என்ன செய்யப்போகிறது.

மாண்பு மிகுந்த பிரதமர் அவர்களே, குறைந்த பட்சம் உயர்ந்த பதவிக்கான அந்த மான்பினையாவது காப்பாற்றுங்கள்,

மதர்ச்சார்பின்மை வேண்டும், சகோதரத்துவம் வேண்டும் என
்றுதான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள், இடதுசாரிகளும் அதற்காகத்தான் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் இன்று ஏகாதிபத்தியத்தின் கால்களில் நமது சுதந்திர செயல்பாடுகளை காவு கொடுக்கிறீர்கள். அதோடு சகோதரத்துவத்தையும் குழிதோண்டி புதைத்து மீண்டும் மதவெறியர்களை அரியணை அமர்த்தும் விதமாக நடந்துகொள்ளுகிறீர்கள்.

மீண்டும் சொல்லுகிறேன் இந்தக் கடிதம் கருணை வேண்டிப் போடப்
பட்ட மனுவல்ல, "நாளைய இந்தியா உங்களை 'துரோகி' என்று தூற்றும்" அதிலிருந்து பிழைக்க முயலுங்கள் என எச்சரிக்கத்தான் எழுதுகிறேன். குதிரை பேரங்களும், கத்தை நோட்டுகளும் இன்று சில அரசியல் ஆதாயங்களை தந்து, எம்.பி எண்ணிக்கையை உயர்த்தி உங்கள் அரசை நிலைக்க செய்யலாம், ஆனால் நாளைய வரலாறில் உங்கள் மீதான பழி என்றைக்கும் அகலாது.

ப்படிக்கு

செம்மலர் இரா சிந்தன்

இந்திய தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு சாமான்யன்