தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜீத்... எனது அன்புக்குரிய வீரத் தாத்தா

தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜீத்... எனது அன்புக்குரிய வீரத் தாத்தா


இந்திய தேசத்திற்கு தியாகம் கற்றுத்தந்த சிவப்பு சரிதங்களில் மற்றும் ஒன்று மறைந்தது. அவர் வாழ்ந்தது தொன்னூற்று மூன்று ஆண்டுகள் - அரசியலில் உழைத்தது 75 ஆண்டுகள் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலத்திற்க்கும் ேலான அரசியல் வாழ்க்கை கொண்டவர் , வயது பதினாறில் பகத்சிங் பாதம் பற்றி இந்திய சுதந்திரத்தை மணம் முடித்த , அவரை மரணம் பற்றும் வரை மாறி நிற்கவில்லை.

பத்து ஆண்டு சிறை வாழ்வு, எட்டு ஆண்டு தலை மறைவு நினைக்கமுடியாத சாகசம் பல புரிந்த உண்மை நாயகன் அவர் . இந்திய தேசத்தின் சுதந்திரம் ஏழை மக்கள் வாழ்வின் விடியலில் இருக்கிறது என்று இடையறாது போராடியவர்.

அகாலி, காங்கிரஸ், கிலாபத் இயக்கங்களோடு இணைந்து போராடி சிறை சென்ற தந்தை, மனம் தளராத தாய் அந்த வீர மகனைப் பெற்றது 1916 இல், அகாலி,கீர்த்தி, சங்கீத் ஆகிய பத்திரிக்கை வாயிலாக சுதந்திர உணர்வு அவனுக்குள் சூழ் கொண்டது. பள்ளி வயதில் பகத்சிங் "நவஜவான் பாரத் சபா" வில் பற்றியது அவனது சுதந்திர வேள்வி.


பகத் சிங்க்-இன் முதலாம் ஆண்டு நினைவு தினத்துக்கு, ஆங்கிலேயக் கலக்டர்க்கு முன்னாள் கலக்டர் அலுவலகத்தில் இருக்கும் ஆங்கிலேயக் கோடி அகற்றி இந்திய கோடி ஏற்றினான், துப்பாக்கி துளைக்கப் பறந்தது அவனை, குண்டுகளை ஏமாற்றி பறந்தான் அவன். நீதிமன்றம் அவனுக்கு தண்டனை கொடுத்தது, நீதிபதியுடன் துணிச்சலாக வாதாடி பின் சிறை சென்றான்.

1934 இல் கம்யூனிஸ்ட் கட்சியிலும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் விடுதலைக்காக போராடியவர், இந்தியப் பிரிவினையின் போது பஞ்சாப்பின் எல்லைப் பகுதிகளில் கலவரங்களைத் தடுப்பதில் பெருமளவில் முனைந்து செயலாற்றினார்.

பிறகு - கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவ, செயல்பாட்டு வழிகாட்டியாக. இந்திய தேசத்தின் இக்கட்டான சூழல்களை கடக்க உதவும் கண்ணியத் தலைவனாக, உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வழிகாட்டியாக கட்சியை வழிநடத்தி சென்றார். மொத்தம் பதின் மூன்று ஆண்டுகள் அவர் தலைமையில் பயணித்தது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம். சோவியத் வீழ்ந்த போதும் உலக நாடுகளின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் மாற்று நிலை எடுத்த போதும், இந்திய கம்யூனிச இயக்கம் தன் நிலை பிறழாமல் இருக்க வைத்து வழிகாட்டிய தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜீத்.

மரணமடைந்தார், தியாக ஜோதியானார்.

இந்திய - உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மாபெரும் இழப்பு இது

அவர் வழி தொடர நமக்கு சிவப்புக் கம்பலங்களில்லை - முள்ளும் கல்லும் நிறைந்த நீண்ட பாதையுண்டு,

சுதந்திர
கனவுகளோடு - தொடரட்டும் நம் பயணம்.