கம்யூனிசம் எனது பார்வையில்


கட்டுரையாளர் - தோழர் குழலி

கம்யூனிசத்தை பற்றி எழுதும் அளவிற்கு கம்யூனிச கொள்கைகளை அதிகம் படித்தவன் இல்லை நான். எனவே இது எனது பார்வை மட்டுமே

சமீபத்தில் சிங்கப்பூரில் ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் எமக்கு வந்த ஒரு புள்ளிவிவர மின்மடலும் இந்த பதிவெழுத தூண்டியவை.

ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த புள்ளிவிவரம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா,சிங்கப்பூர்,இந்தியா மற்றும் சில நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம், கடைசி 5% மக்களின் சராசரி வருமானம், முதல் 5% மக்களின் சராசரி வருமானம் பற்றிய ஒரு விவரம்.


அதில் புலப்படும் உண்மையென்னவெனில் ஆண்டு தோறும் எல்லா நாட்டு மக்களின் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து கொண்டே செல்கின்றது, அதே சமயத்தில் கடைசி 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் குறைந்து கொண்டே வருகின்றது. முதல் 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் மிக அதிக அளவில் அதிகரிக்கின்றது.

மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் பொழுது முதல் 5% இருப்பவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சம்பாதித்தது 27$, தற்போதைய நிலை மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் நேரத்தில் இவர்கள் சம்பாதிப்பது 200$, அமெரிக்காவில் முதல் 0.12%ல் இருப்பவர்கள் மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சம்பாதித்தது 200$ தற்போது 17,000$

இவைகள் சொல்லும் செய்தி என்னவெனில் உலகளாவிய அளவில் பணக்காரம் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும் ஏழையாகின்றான். நாளுக்கு நாள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

'கம்யூனிசம் சரியானது, கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்' என்பது அடிக்கடி கேள்வி பட்ட ஒரு சொலவடை, அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றது. நம்மால் கம்யூனிசம் என்றால் தொழிற்சங்கங்கள், ரஷ்யா, சீனாவைத் தாண்டி அதற்கு வெளியில் யோசிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். அல்லது யோசிக்க வேண்டாமென இருக்கின்றோம்.

கம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது.

முதலாளித்துவத்தில் பெரும் பொருள் ஈட்ட வேண்டும், இலாபக்குறியீடு வருடா வருடம் ஏற வேண்டுமென்ற நோக்கில் மனிதாபிமானமற்ற, Unethical முறைகளையெல்லாம் கையாள்கின்றனர், அவுட்சோர்சிங் என்ற முறையிலே இன்று பல வேலைகள் வெளிநாட்டிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன, அதனால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகுவதும் என்னைப்போன்ற பலர் நல்ல சம்பளம் பெறுவதும் நடைபெறுகின்றது, அவுட்சோர்சிங் செய்பவர்களின் நோக்கம் நல்ல இலாபம் ஈட்டுவது மட்டுமே, இந்தியாவைவிட குறைந்த செலவில் யாரேனும் செய்து தர தயாராக இருந்தால் இந்தியாவை விட்டு அங்கே சென்றுவிடுவர், ஆனால் இந்த அவுட்சோர்சிங் முறையால் வேலையிழந்த அந்த நாட்டுக்காரர்களின் நிலை என்ன?? அந்த நிறுவனத்தின் இலாபக்குறியீடு ஏறிக்கொண்டே செல்லும் அதனால் ஒரு சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் தொழிலாளிகள் நிலை ஒரு பெரிய ? இது தான் முதலாளித்துவத்தின் கோர முகம்.

கம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது ஆனால் இன்றைய நிலை??, கம்யூனிசமே பரவாயில்லை என்ற நிலை அங்கே, கம்யூனிசம் இருந்த போது கிடைந்த அடிப்படை தேவைகள் வசதிகள் கூட அங்கே தற்போது பெரும்பாலான மக்களுக்கு கிடைப்பதில்லை, விளைவு இன்று வளைகுடா நாடுகளின் கேளிக்கை விடுதிகள் சில இரஷ்ய பெண்களால் நிரம்பி கிடக்கின்றன,பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கின்றன.

இரஷ்யா சிதறுண்டதும், அங்கே கம்யூனிசம் தோல்வி அடைந்ததும் கம்யூனிசத்தின் தோல்வி என்பதல்ல, அது கம்யூனிசத்தின் வெற்றிதான், சில/பல சமயங்களில் எளிதாக கிடைக்கும்போதும் அனுபவிக்கும் போதும் அதன் பெருமை தெரியாது, வேறொன்றிற்கு ஆசைப்பட்டு அதை இழந்து உள்ளதும் போனதடா நொள்ளக் கண்ணா என்றிருக்கும்போது தான் அதன் பெருமை தெரியும், அந்த நிலைதான் இன்று இரஷ்யாவின் நிலை. இது ஒரு வகையில் கம்யூனிசத்தின் வெற்றிதான்.

கம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்

1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

எல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது

என் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.

எனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.

வலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா?

வலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா? சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா?

வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா?

நாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.

உலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.

கருத்துகள் இல்லை: