அமெரிக்கா - இது கனவுகளை காவுவாங்கும் தேசம்

கட்டுரையாளர்:

பூமிநாதன்

TCS Consultent

Lehman brothers

"Lehman brothers" என்ற பெயரை சமீப காலமாக நீங்கள் அதிகமாக கேட்டிருப்பீர்கள். அமரிக்காவின் Wall Street-ல் தொடங்கி நம்ம ஊர் டீக்கடை வரை " Lehman brothers " திவாலான கதையைப் பேசுகிறார்கள். அமெரிக்கா தனது வரலாற்றில் பல நிதி நெருக்கடிகளை சந்தித்திருக்கிறது ஆனாலும் இவ்வளவு பெரிய பாரம்பரிய நிறுவனம் வீழ்ச்சியடைவது இதுவே முதல்முறை. 158 வருட பாரம்பரியமிக்க அந்த வங்கி தன் வாழ்நாளின் கடைசிக்கட்டத்தை எண்ணிக்கொண்டிருக்கிறது. இப்போது நானும் இந்த நிதி நிறுவனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறேன்.

எங்கோ இருக்கும் அமெரிக்க நிதி நிறுவனம் அறிவித்த திவால் அறிக்கை, உலக நாடுகள் அனைத்தையும் பாதித்தது (முக்கியமாக பங்குச் சந்தைகளை). அடுத்த திவால் வரிசையில் AIG (American International Group) வர தயாராக உள்ளது. இன்னும் பல நிதி நிறுவனங்களின் காலாண்டு அறிக்ககைகளை கவனிக்கும்பொழுது அவைகளும் விரைவில் வீழ்ச்சியை சந்திக்க இருப்பதைக் காட்டுகிறது. எனவே அமெரிக்காவின் வரலாற்றில் மற்றுமொரு மோசமான காலகட்டம் தயார் நிலையில் இருக்கிறது.

அமெரிக்காதானே அதுகிடக்கட்டும் என்று நாம் விட்டுவிட முடியாது ஏன் என்றால்? அது உலகப் பொருளாதாரத்தின் முதுகில் ஏறியிருக்கும் சாத்தான்.

இப்போது " Lehman brothers " வெளியிட்டுள்ள இந்த திவால் அறிக்கை சுமார் 25000 பேரை வேலை இழக்கச் செய்யும். இதில் இந்திய Lehman brothers- ல் வேலை செய்யும் 2500 பேரும் அடக்கம். இது தவிர என்போல மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுள்ள சுமார் 3000 இந்தியர்களின் நிலையும் கேள்விக்குறி தான். இதனை உன்னிப்பாக கவனித்தால் வேலை இழப்போரில் ஐந்தில ஒருபங்கு இந்தியர்கள் என்பது புலப்படும். அமெரிக்க கனவுகளோடு, இங்கே வேலைக்கு சேரவும், எப்படியாவது Green Card வாங்கிவிடவும் துடிக்கும் இந்திய இளைஞர்கள், இங்கு வந்த பின்பே உண்மை நிலைமையை புரிந்துகொள்கிறார்கள்.

எனக்கு தெரிந்த பல அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிலை இப்போது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வேலை இல்லாமல் ஒரு இந்தியன், அமெரிக்காவில் ஒரு மாதத்தை ஓட்டுவது, முள்மேல் நடக்கும் வித்தைதான். சம்பாதிக்கும் பணத்தைக் கெண்டு சொகுசான வாழ்க்கை வாழப் பழக்கும் அமெரிக்க சூழலிருந்து ஒரே நாளில் கீழே இறங்கவேண்டிய நிலை கொஞ்சம் கடினம். இன்றைய நிதி நிலைமையின் காரணத்தால் பணரீதியான பாதிப்புகள் மட்டுமல்லாமல் உளரீதியான பாதிப்புகள் வேறு நம்மை பாதிக்கிறது. நம்முடைய எதிர்பார்ப்புகள், எதிர்காலத திட்டங்கள் எல்லாம் ஒரு நாளில் தவிடுபொடியாகும் போது, நம்மை நம்பி இருக்கும் குடும்பம் மற்றும் உறவினர்கள் ஆகியோரைப் பற்றிய எண்ணம் மனதை அழுத்துகிறது. இவற்றைஎல்லாம் தாண்டியே ஒரு அமெரிக்கா வாழும் இந்தியன் நாட்களை ஒட்டவேண்டிய நிலை.

நமக்காவது இது பிழைக்கவந்த நாடு, இதனை விட்டுசென்றால் சொந்த நாடு இருக்கிறது, சொந்தங்கள் உண்டு (எதிர்பார்ப்புகள் அடுத்த விஷயம்), ஆனால் இந்த நாட்டிலே பிறந்து இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம். வேலை இல்லாத ஒவ்வொருநாள் வாழ்க்கையும் அவர்களுககு இனி அரளி விதை தான். திவால் அறிக்கையைக் கேட்டு 55 வயதான என்னுடைய மேளாளர் கலங்கிப் போய்விட்டார். கிட்டத்தட்ட 20 வருடாங்களாக இங்கே வேலை செய்துகொண்டிருக்கும் அவரால் இனிமேல் புதிதாக வேலை தேடி மீண்டும் தன்னை நிரூபித்து வாழ்க்கையை தொடர்வது மிகக் கடினமான சோதனை.

அமெரிக்க அரசு வேலை இல்லாத இளைஞர்களுக்கு இழப்பீட்டு பென்ஷன் வழங்குகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆட்குறைப்பிற்கு ஆளான தொழிலாளர்கள் இதனைப் பெற்றார்கள். ஆனால் திவாலாகி வெளியேறும் இந்தத் தொழிளார்களுக்கு அதுகூட கிடைக்காத நிலை அந்த 401$ க்காக நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்.

என்னுடைய நண்பன் ஒருவன் ஒரு ஏஜென்சி துணையோடு இங்கு H1 Visa மூலம் வந்து வேலை செய்து வருகிறான். வந்து 8 மாதத்தில் கிடைத்த வேலை பறிபோய்விட்டது. இப்போது அவன் ஒரு மாதத்திற்குள் வேலை தேடியாக வேண்டும், அதற்குள் அவனிடம் இருக்கும் பணமும் கரைந்துவிடும். அதற்குமேல் வேலை தேட அவனது ஏஜென்சியும் அனுமதிக்காது. நேரடியாக வேலை தேடி இங்கு வந்த இந்திய நண்பனின் கதையோ இன்னமும் பரிதாபம். அவனும் H1 Visa மூலம் வேலை செய்து வருகிறான். குடும்பம், குழந்தை வேறு. வேலை இழந்த உடன் அவனது தகவல்கள் தொழிலார்கள் துறைக்கு (immigrant office) போய்விடும். உடனடியாக வேறு வேலை தேடியாக வேண்டும். 15 நாட்களுக்கு மேல் வேலையின்றி H1 Visa வில் இருப்பது இங்கு சட்டப்படி குற்றம். அல்லது அவன் தன் சொந்த ஊருக்கு போக வேண்டும். விழி பிதுங்கி இருக்கிறான் அவன்.

இப்போது நெருக்கடி மிக்கதொரு மோசமான சூழல் எழும்பி வருகிறது. உழைப்பு சந்தையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலமாக அதிக வேலையாட்கள் சேர்ந்துவிட்டார்கள். ஏற்கனவே அமெரிக்கா 9.4 மில்லியன் வேலையில்லா மக்களைக் கொண்டுள்ளது. அந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரித்துவருகிறது. இப்போது மற்ற நிறுவனங்களில் வேலை தேடுவது கொஞ்சம் கடினமான காரியம். நேரடி அமெரிக்க வேலையாட்களுக்கே வேலை கிடைக்காத சூழலில், மறைமுகமாக அதாவது ஏஜென்சிக்கள் மூலம் வேலை தேடும் நம் நாட்டு இளைஞர்கள் நிலை என்னவாகும்?

எந்த கேள்விகளும் கேட்காமல் சொல்வதை கேட்டுக்கொள்ளும் மனப்பான்மைதான் நாகரீகம் என்று பழகியிருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் கூட இல்லாத நிலையில் எல்லா வாழ்வாதார பிரச்சனைகளையும் நாங்கள் தனிமனிதர்களாகவே தாங்கிவருகிறோம். இப்படி அமெரிக்க கனவுகளோடு வந்திருந்து வசிக்கும் தொழிலாளர்களின் மனக்குமுறல்கள், வேதனைகள் எண்ணிலடங்காது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் வந்து இப்படி மாட்டிக்கொள்ளும் எங்களுக்கும் 'விளக்கில் அகப்பட்ட விட்டில் பூச்சிகளுக்கும்' அதிக வித்தியாசம் இல்லை. சூழல்கள் கடினமாகிக் கொண்டிருக்கும் இப்போதுதான் புரிகிறது ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியதின் அவசியம். அமரிக்க கனவு தேசம் என்று எண்ணியிருந்தவர்கள் இப்போதுதான் புரிந்திருக்கிறது இது கனவுகளை காவுவாங்கும் தேசம்.

கருத்துகள் இல்லை: