இடதுசாரி அரசியலும் - நமது கடமையும்

டந்த 61 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏகபோக முதலாளித்துவ பாதை, இன்று ஒரு அபாயகரமான திருப்பத்தை அடைந்திருக்கிறது. இதற்கு மாற்று சக்தி என்று ஊடகங்களால் முன்னிறுத்தப் படும் பா.ஜ.க வின் வகுப்புவாத, குஜராத் "மாதிரி" (model) யும், சந்தர்ப்பவாத கர்நாடக "மாதிரி" யும் காட்டும் பாதை, நம் தேசத்தை பின்னோக்கி இழுத்து அழிவுக் குழியில் தள்ளுவதாக இருக்கிறது.

இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சற்று கவலையோடு கவனித்தால், எப்படியாவது, எல்லாவித சித்து விளையாட்டுக்களையும், குதிரை பேரங்களையும் செய்து, ஆட்சிக் கட்டிலில் ஒட்டிக்கொண்டு ஏகாதிபத்தியத்தின் "இளைய பங்காளியாக" இந்தியாவை மாற்றி, நமது தேசத்தின் சுயேச்சையான செயல்பாடுகளை காவு கொடுக்க துடிக்கிறது காங்கிரஸ். இந்த இக்கட்டான நிலையை எப்படியாவது தனக்கு சாதகமாக்கி, நாட்டை அந்நியனிடம் அடகு வைப்பது மட்டுமில்லாமல், மக்களை வகுப்பு ரீதியாக பிரித்து அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து நிரந்தர அடிமை ஆக்கும் தனது "பாசிச" திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது பா.ஜ.க.

இதுவரை அறிந்திராத எந்த ஒரு கொள்கைகளுக்காகவும் இவர்களை நாம் எதிர்க்க தேவை இல்லை,

பண வீக்கம் இரட்டை இலக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்த போதே , பெட்ரோலிய விலை உயர்வையும் மக்கள் மீது சுமத்தி ஒன்றும் தெரியாதவன் போல் "மந்திரக் கோல்" இல்லை என அறிவிக்கிறது காங்கிரஸ். இந்த செயல் பாடுகளுக்கு எந்த ஒரு எதிர்ப்போ , மாறு திட்டங்களோ சொல்லாத பா.ஜ.க, மக்கள் நலத் திட்டங்களையும் மத பிரச்சினை ஆக்கி எப்படியாவது அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க. ஏழை நடுத்தர மக்களை கொஞ்சமும் சிந்திக்காத - இவர்களின் இந்த செயல்பாடுகளே போதும் இவர்கள் நம் எதிரிகள் என்று இனம் கண்டறிவதற்கு.

பண பலமும், அதிகார பலமும் கொண்ட இந்தக் கூட்டத்திடமிருந்து, ஏழை நடுத்தர மக்களை பாதுகாப்பதற்காக அவர்களின் ஒவ்வொரு செயல் பாடுகளையும் ஆக்காவபூர்வமான வகையில் விமரிசித்தும், எதிர்ப்பு காட்டியும் வந்திருக்கிறார்கள். இன்று இந்த நிலை ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து நிற்கிறது. உலகம் முழுக்க இடதுசாரி அரசியலின் பக்கம் மக்களின் பக்கம் ஏழை நடுத்தர மக்கள் நம்பிக்கை வலுத்துவரும் நிலையில், இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத ஒரு மாற்று அரசியல் சக்தியாக அது வளரும் வாய்ப்புகளும் பிரகாசமாகிறது, எனவே பலரும் யார் அந்த இடதுசாரிகள் ஆர்வமோடு நோக்குவதும் தவிர்க்க முடியாதாகிறது.

பிரெஞ்சு புரட்சிக்கு பின் (1789) ஜனநாயக சக்திகள் முன்னேறிய காலத்தில், பிரெஞ்சு பாராளுமன்றம் காரசாரமான விவாதக் களமாக விளங்கியது. இந்த விவாதங்களில் பழமைவாதிகள் - சமுதாய மாற்றங்களை (முக்கியமாக தனிச் சொத்து மற்றும் அதன் அடிப்படையிலான மாற்றங்களை) கடுமையாக எதிர்த்தனர். அந்த பழைமைவாதிகள் சபாநாயகரின் வலது புற இருக்கைகளில் அமர்ந்தனர்.

இந்த சமுதாயக் கட்டமைப்பின் அடிப்படையே தவறு - அதனை அடிப்படையிலிருந்தே மாற்ற வேண்டும். மக்களுக்கு ஜனநாயம் கிடைக்க வேண்டும் என்றால் - அதிகாரம் படைத்தோர் - அடிமைகளை சுரண்டி சேர்த்த சொத்துகள் - மக்களுக்கு பொதுவான சொத்துக் களாக மாற வேண்டும் என்பது போன்ற புரட்சிகர கருத்துகளை முன்வைத்தவர்கள் சபாநாயகருக்கு இடது புறம் அமர்ந்தனர்.

புரட்சி எப்படி மன்னரை தூக்கி எறிந்ததோ - அது போலவே - மன்னரை ஒண்டி வாழ்ந்து மக்களை சுரண்டியவர்கள், அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறை என்று எல்லாத்துறைகளையும் தூக்கி ஏறிய வேண்டும் என்று வாதாடினர் அந்த இடது பக்கக் காரர்கள் .

இந்தக் காரணங்களால் - அரசியலில் - வழக்கத்திற்கு மாறான சிந்தனை கொண்டவர்கள் இடது சாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இன்றைய கட்டுக்கோப்பை மாற்றாமல் சில அடிப்படை விசயங்களை மாற்றுவதன் மூலமே நல்ல உலகம் அமைக்க மடியும் என்ற மிதமான கோசங்கள் கொண்டவர்களும் இதில் அடங்குவர்.

ஆனால
"இன்றைய சமுதாய அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்"

என்று பகிரங்கமாகவே அறிவித்து செயல்படுபவர்கள் கம்யுனிஸ்ட்கள். ஒருவன் மற்றொருவன் உழைப்பை தெரிந்ததே சுரண்டுவதன் மூலமாக வளருவதையும் , தான் சுரண்டப்படுவது தனது தலைவிதி என்று மற்றவர்கள் நம்புவதையும் - அடிப்படையிலிருந்தே மாற்றி அமைப்பது, அதன் மூலம் ஏற்ற தாழ்வற்ற சமுதாயத்தை நோக்கிச் செல்வதுதான் கம்யூனிஸ்ட்கள் லட்சியம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப் பட்ட அந்த நாளிலிருந்து கம்யூனிஸ்ட்கள் தங்கள் இலக்கை ஓர்போதும் மறைத்து வேடம் போட்டதில்லை.

அமைதியாகவோ, தேவைப்பட்டால் பலவந்தமாகவோ இலட்சியத்தை அடையத் தயாராக இருப்பது மட்டுமின்றி எண்ணற்ற தியாகங்களின் மூலம் வரலாற்றில் அதனை செயல் படுத்தியும் காட்டியவர்கள் கம்யூனிஸ்ட்கள். எனவே - எல்லா கம்யூனிஸ்ட்களும் இடதுசாரிகளே.

உலகம் முழுக்க பல நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார காலனிகளாக நாடுகள் மாற்றப்படும் முயற்சிகளுக்கு - வலதுசாரிகள் பெரும் ஆதரவு அளித்து வரவேற்பதால், உலக ஏழை, நடுத்தர மக்களில் வாழ் நிலையே கேள்வி குறியாகி இருக்கிறது. இதன் காரணமாக இன்றைய (உலக மற்றும் இந்திய) அரசியலில் இடதுசாரி - மற்றும் கம்யூனிஸ்ட் மாற்றி நோக்கிய பார்வை தவிர்க்க முடியாததாகி இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய போதிலிருந்து அது தனது செயல் பாடுகளை மக்கள் நலன் அடிப்படையிலானதாகவே கொண்டு - தீரம் மிக்க தியாகங்கள் செய்து வளர்ந்ததாகவே இருக்கிறது.

"பிரிடிஷ் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக எங்களை குற்றம் சாட்டுகிறீர்கள். நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம் இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் சதி செய்தோமென்று குற்றம் சாட்டினால் அதை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம்

ஆனால் நாங்கள் சதிகாரர் கள் இல்லை, பிரிடிஸ் ஆட்சியை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக சூளுரைத்து போராடிவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாங்கள்!
இந்த சதிக் குற்றச் சாட்டின்படி எங்களை தூக்கில் போட்டு கொன்று விடலாம் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை! தூக்கு மேடை எங்களுக்கு துரும்பு!"


சென்னை உயர்நீதி மன்றத்தில் தோழர் பி.ராமமூர்த்தி சூளுரைத்த வாசகங்கள் அவை. இவ்வாறு சென்னை சதி வழக்கு கோவை சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதிவழக்கு .. என்று கட்சி துவங்கிய துவக்க காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி மீது போடப்பட்ட சதி வழக்குகளும் , அடக்கு முறைகளும் ஏராளம்.

காங்கிரஸ் போல் அல்லாமல் - கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. அன்று ஆரம்பித்து - இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி முத்தாய்ப்பான கப்பல் படை எழுச்சியை காங்கிரஸ் எதிர்த்த போது - அந்த வீரர்களோடு களத்தில் இறங்கி உயிரையே பழி கொடுத்து சுதந்திர ஜோதியை காத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்

இறுதியில் கப்பல் படை வீரர்கள் சரணடையும் போது கூட
" நாங்கள் இந்தியாவிடம் சரணடைகிறோம், இங்கிலாந்திடம் அல்ல"

என்று அறிவித்தார்கள். கம்யூனிஸ்ட்கள் உறவு தந்த கர்ஜனை அது.

சுத்திரத்திற்கு பிறகு , உண்டியல் கட்சி, வேலை நிறுத்தக் கட்சி என்று கிண்டலாகவும், ஏளனமாகவும் அடையாளப் படுத்தப் படும் இடதுசாரிகள் உண்மையிலேய அந்த ஏளனப் பேச்சுக்களுக்காக பெருமைப்படுகிறார்கள்.

பெரும்பான்மை ஏழை, நடுத்தர மக்களுக்கு சார்பான அரசாக அமைய வேண்டுமானால் - அந்த இயக்கம் பெரும்பான்மை மக்களின் உதவியோடு வளர்வதே சிறப்பு - அவர்கள் உண்டியல் ஏந்தி மக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக சேகரித்து கட்சி நடத்துவதையும், ஏழை மக்களின் கண்ணீருக்காக அவர்களோடு வீதியில் இறங்கிப் போராடுவதையும் பெருமையாகக் கருதுவதும் - அந்த அரசு யாருக்காண அரசாக அமையும் என்பதன் வெளிப்பாடுகளே.

"சங்கமாக ஒன்று படு!
சளைக்காமல் போராடு!
சாணிப்பால் குடிக்க மறு
அடித்தால் திருப்பி அடி"


இதுதான் தஞ்சையில் கீழை தெருக்களில் - கீழ வெண்மணியில் விவசாய பணயார்களின் அடக்குமுறையை எதிர்த்த ஏழை மக்களுக்கு தோழர் சீனிவாசராவ் அளித்த போதனை. அவர்களின் கோரிக்கை
# சாணிப்பால், சவுக்கடி தண்டனை கூடாது
# அளவில் மோசடி செய்வதை தவிர்க்க முத்திரை இட்ட மரக்கால் பயன் படுத்த வேண்டும்


எங்களை மனிதனாக நடத்து என்று போராடிய அவர்களுக்கு கிடைத்த தண்டனையோ!

உலக வரலாறு பலமுறை கண்டது தான். ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைக் குரல் எப்படி கொடூரமான முறையில் அடக்கப் படும் என்பதற்கு மற்றும் ஒரு சான்று. ஒரு கூட்டத்தின் அதிகார வெறிக்கு - இன்று இராக் அழிகிறதே - அதன் இந்திய சான்று

மொத்தமாக 40 பேர், மூன்று வயது குழந்தை முதல் 80 வயது கிழவன் வரை - ஒரே குடிசையில் கதறக் கதற உயிரோடு எரித்து சாம்பலாக்கப் பட்டார்கள்.

இன்று அந்த கோரங்கள் தொடர்கின்றன - கம்யூனிஸ்ட்கள் போராட்டங்களும் தொடருகின்றன. விமர் சனங்களும், சுய விமரிசனங்களுமாக அந்த இயக்கம் உலைக்களத்தில் இட்ட இரும்பாய் மெருகேறிக் கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட்களும் இடதுசாரிகளும் மூர்க்கமாக எதிர்த்த GATT (உலகமயம், தாராளமயம்) ஒப்பந்தம் இன்று வரலாறு காணாத விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலைஏற்றம் போன்ற நாசகர விளைவுகளை நம் மீது ஏற்படுத்தியதும், நமது அன்றாட வாழ்க்கை செலவுகளையே சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளியதும் நினைத்து பார்க்க தகுந்தது. மக்கள் விரோத ஆட்சியாளர்களின் ஒற்றை கையெழுத்துக்கு நம் அன்றாட வாழ்க்கை பலியாவதை எதிர்த்து உறுதியாகப் போராடும் இடதுசாரிகளின் பின் திரண்டு மக்கள் வாழ்வை காப்பாற்ற வேண்டியது இன்று ஜனநாயக ஆர்வலர்களின், தேசபக்தர்களின் முன் இருக்கும் அவசரக் கடமையாகும்.

கருத்துகள் இல்லை: