ஈவோ மொரேல்ஸ் மீண்டும் மகத்தான வெற்றி


அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சாகசங்களை மீண்டும் மீண்டும் உலகம் முழுவதும் அமலாக்கம் செய்துக் கொண்டே இருக்கிறது. தனது நாட்டின் பொருளாதார நெருக்கடியை மீட்கமுடியாமல் தடுமாற்றம் அடைந்திருந்தாலும் கூட அது தன்னை உலக காவல்காரன் என்ற நிலையிலிருந்துதான் அனுகுகிறது. இந்தியாவுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெப்பம் இட நெருக்கடி கொடுத்த போது இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் அது ஆபத்தில் முடியும் ஒப்பந்தம் என்றார்கள் ஆனால் காங்கிரஸ் கேட்க்க தயாரில்லை. இந்தியாவின் சுயசார்பு கேள்விக்குறியாக மாறும் என்றனர், நமது ஊடகங்கள் இடதுசாரிகளுக்கு வேறு வேலை இல்லை என்றனர். ஆனால் இதோ ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இந்தியா மாற்றப்பட்டதன் முதல் விணை ஈரானுக்கு எதிராக அணு பயன்படுத்தல் தீர்மானத்தில் இந்தியா கையெப்பம் இட்டுள்ளது. இந்தியா கட்டிக்காத்து வந்த அணிசேரா கொள்கை என்ற தத்துவம் மூட்டைக்கட்டப்பட்டுள்ளது.இப்போதும் சில அப்பாவிகள் அமெரிக்காவை எதிர்த்துக்கொண்டு இந்தியா வல்லரசாக மாற முடியாது என்று பேசுகின்றனர். இந்தியா வல்லராசாக மாறுவது இருக்கட்டும் இந்தியாவில் அனைவருக்கும் கல்வி என்ற இலக்காவது முதலில் எட்டப்பட வேண்டும் என்பதுதான் நமது ஆசை. லத்தின் அமெரிக்க நாடுகள் ஒரு காலத்தில் அமெரிக்காவில் வேட்டைக்காடாக இருந்தது. ஆனால் அங்கு அடித்த சிகப்புக் காற்று அந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சே, பிடல், லூலா, மொரோலஸ் என்று தலைவர்கள் எழுந்துக்கொண்டே இருக்கின்றர்கள். இதோ மீண்டும் ஒரு எழுச்சி பொலிவியாவில் நடந்த தேர்தலில்.


இது குறித்து இன்றைய தீக்கதிர் தலையங்கத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். .........................எஸ்.ஜி.ரமேஷ்பாபு

“பூமித்தாய் பெற்றெடுத்த உலகக் கதாநாயகன்” என்று கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா. பொதுச்சபையால் புகழாரம் சூட்டப்பட்ட பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் மீண்டும் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.


சுமார் 470 ஆண்டுகளாக ஸ்பெயின் ஆதிக் கத்தின் கீழ் இருந்த பொலிவியாவில் முதல் முறையாக அய்மாரா பூர்வ குடியைச் சேர்ந்த மொரேல்ஸ் 2006ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 45 சதவீதம் வாக்குகள் பெற்ற அவர், 2008 ஆகஸ்ட் 14ந்தேதி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 57 சதவீதம் வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் மேலும் 10 சதவீத வாக்குகள் அதிகரித்து, 67 சதவீத வாக்கு கள் பெற்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அசைக்க முடியாத சக்தியினை பெற்றுள்ளார்.

மொரேல்ஸின் “சோசலிசத்திற்கான இயக் கம்” என்ற கட்சி மிகப்பெருவாரியான பொலிவிய மக்களின் மனதில் இடம்பெற்றிருப்பதற்கு, அவர்களின் நம்பிக்கையை மீண்டும் மேலும் வலுவான முறையில் பெற்றிருப்பதற்கு, கடந்த நான்காண்டுகளில் மொரேல்ஸ் ஆற்றிய மகத்தான பணிகளே காரணம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் களமாக இருந்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் முக்கியமான நாடு பொலிவியா. அமெரிக்க பெரும் நிறுவனங்களின் ஆடுகளமாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு முக்கிய மைய மாகவும் இருந்த பொலிவியாவில், மொரேல்ஸ் தலைமையிலான இடதுசாரிச் சார்பு கொண்ட ஆட்சி அமைந்த பின்னர் நிலச்சீர்திருத்தம் தீவிரப்படுத்தப்பட்டது; அந்நாட்டின் மிகப்பெரு வாரியான பூர்வகுடி ஏழை மக்களுக்கு நிலமும், கல்வியும், வேலைவாய்ப்பும் உத்தரவாதப்படுத் தப்படும் வகையிலான புதிய கொள்கைகள் அமலாக்கப்பட்டன; சமீபத்தில் எண்ணெய் நிறு வனங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; கடந்த மூன்றாண்டு களில் எழுத்தறிவின்மை கிட்டத்தட்ட முற்றிலு மாக ஒழிக்கப்பட்டுவிட்டது; லத்தீன் அமெரிக் காவில் கியூபா, வெனிசுலாவைத் தொடர்ந்து எழுத்தறிவின்மையிலிருந்து முற்றிலும் விடு தலைபெற்ற நாடாக பொலிவியா திகழ்கிறது; லட் சக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்தியது மொரேல்ஸ் அரசு.

சமீபத்தில் கியூபாவின் மகத்தான தலைவர் பிடல்காஸ்ட்ரோ எழுதிய கட்டுரையில், மொரேல்ஸின் இந்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு, உலகை நாசப்பாதைக்கு கொண்டுசென்ற அமெரிக்க ஏகாதிபத்திய தேர்ந் தெடுத்த ஜனாதிபதி ஒபாமாவுக்கு அறிவிக்கப் பட்ட நோபல் பரிசு நியாயமாக மொரேல்ஸுக்குத் தான் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் 6ந்தேதி ஜனாதிபதி தேர்தலில் மேலும் பெருவாரியான மக்களின் இதயங்களை வென்று மொரேல்ஸ் மகத்தான வெற்றி பெறுவார் என்று பிடல் காஸ்ட்ரோ கூறியிருந்தார். அவரது வாக்கு இன்று நனவாகியுள்ளது. பொலிவிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் ஆலோ சனை நடத்தாமலே அரசியல் அமைப்புச் சட் டத்தைக் கூட மாற்றும் அளவிற்கு தற்போது மொரேல்ஸுக்கு பலம் கிடைத்துள்ளது. எனினும், “எமது இலக்கு ஒட்டுமொத்த பொலிவியாவின் வளர்ச்சி; மாற்றுப்பாதையில் நடைபோடும் வளர்ச்சி; அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்துப் புதிய பாதையில் பொலிவியாவை முன்னேற்றுவோம்” என்று வெற்றி ஊர்வலத்தில் கூறியுள்ளார்.

வெல்க, மொரேல்ஸின் மகத்தான முன்னேற்றப் பயணம்!

கருத்துகள் இல்லை: