- சத்தீஷ்
மூன்றாவது அணி என்பது மூன்றாவதாக வரும் அணி என்று பலராலும் பலமுறை எள்ளி நகையாடப்பட்டிருந்தாலும், 2009 மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை மூன்றாவது அணிக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்ட நாள்முதலே, மூன்றாவது அணிக்கான முயற்சியில் இறங்கிவிட்டார் அவர்.
தில்லி ஹுமாயூன் சாலையிலுள்ள உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியின் வீட்டிற்குப் போய் அவரைத் துணைக்கு அழைத்தது முதல், ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கைகுலுக்கி பிஜு ஜனதா தளத்தை மூன்றாவது அணியில் இணைத்துக் கொண்டதுவரை பிரகாஷ் காரத் அசுர வேகத்தில் தனது பகடைக் காய்களை உருட்டி உருட்டி செயல்பட்டார். தேர்தல் முடிவுகளுக்குப்பின் இடதுசாரிகளின் விரலசைப்பில் மட்டும்தான் ஓர் அரசு அமைந்தாக வேண்டும் என்கிற நிலைமையை ஏற்படுத்துவதுதான் பிரகாஷ் காரத்தின் மாஸ்டர் பிளான்!
பிரகாஷ் காரத் பிறந்தது பர்மாவின் (இன்றைய மியான்மர்) தலைநகரான ரங்கூனில் (இப்போது யங்கூன்). இவர் பிறந்த தேதி பிப்ரவரி 7, 1948 என்றாலும் அதிகாரபூர்வமான பிறந்த தேதி அக்டோபர் 19, 1947. பிரகாஷ் காரத்தின் தந்தை அன்றைய பிரிட்டிஷ் ரயில்வேயில் அதிகாரியாக இருந்தவர்.
பள்ளியில் படிக்கும்போதே தனது தந்தையை இழந்த பிரகாஷும் தாயார் ராதாவும் சொந்த ஊரான கேரளத்துக்குப் போகாமல், தஞ்சமடைந்தது நமது தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பொருளாதாரம் படித்த பிரகாஷ் காரத், பல்கலைக்கழகத்திலேயே சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் பெற்றதுடன் இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு உதவித் தொகையும் பெற்றார்.
பிரகாஷ் காரத்தின் எடின்பர்க் பல்கலைக்கழக வாழ்க்கைதான் அவரை ஒரு பொதுவுடைமை சிந்தனையாளராக மாற்றியது. மார்க்ஸýம், ஏங்கல்ஸýம் பிரகாஷுக்கு அறிமுகமானது அங்குதான். 1970-ல் இந்தியாவுக்குத் திரும்பிய பிரகாஷ் காரத், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பைத் தொடர முற்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சம்மேளனத்தின் (எஸ்.எப்.ஐ.) நிறுவனத் தலைவர்களில் பிரகாஷ் காரத்தும் ஒருவர், தெரியுமா?
எஸ்.எப்.ஐ.யின் தள நாயகர்களில் ஒருவராக இருந்த காலத்தில் கட்சித் தலைவராக இருந்த ஏ.கே. கோபாலனின் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு காரத்துக்குக் கிடைத்தது. அவசரநிலைச் சட்டப் பிரகடனமும், அதை எதிர்த்து நடந்த போராட்டமும், அவரைத் தலைமறைவு வாழ்க்கை வாழவும், காவல்துறையால் பிடிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உள்படுத்தியது. சுமார் ஒன்றரை வருடம் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தலைமறைவாக வாழ்ந்தவர் பிரகாஷ் காரத் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் பிரகாஷ் காரத் மீண்டும் சென்னைவாசியானார். இந்த முறை அவர் தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சிந்தனின் வலது கரமாகத் தொழிலாளர் பிரச்னைகளில் முழுநேர கவனமும் செலுத்த நேர்ந்தது. 1985-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் பார்வையில் பட்டார். அடுத்த சில வருடங்கள், ஈ.எம்.எஸ்.சின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட்டது காரத் தான் என்பது தில்லியிலுள்ள கட்சித் தலைமையகமான ஏ.கே.ஜி. பவனுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவருக்கும் தெரியும்.
பிரகாஷ் காரத் 1992-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் "பொலிட்பீரோ'வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்திய அரசியல் மிகப்பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம். ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி பாபர் மசூதி இடிப்புப் பிரச்னைவரை, நாளும் பொழுதும் அன்றைய நரசிம்ம ராவ் அரசு தனது செல்வாக்கை இழந்து வந்த நேரம். பாஜகவும், இடதுசாரிகளும் நரசிம்ம ராவுக்குத் தந்து கொண்டிருந்த மறைமுக ஆதரவை விலக்கிக் கொண்ட நேரமும்கூட.
ஈ.எம்.எஸ்.ஸýக்குப் பிறகு பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற ஹர்கிஷண்சிங் சுர்ஜித்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகப் பிரகாஷ் காரத் தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை. ஈ.எம்.எஸ்.ஸýக்குப் பிறகு கட்சியின் தத்துவ போதகர்களில் பிரகாஷ் காரத் முன்னிலை வகித்தார் என்பதுதான் நிஜம். 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தபோதும், அதற்குப் பிறகும் கட்சியின் வெளியில் தெரிந்த முகமாக ஹர்கிஷண்சிங் சுர்ஜித் இருந்தாலும், பின்னணியில் நிழலாகச் செயல்பட்டவர் பிரகாஷ் காரத்தான்.
1996-ல் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் நடந்த ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு வெளியில் தெரியாமலே போய்விட்டது. ஐக்கிய முன்னணி அரசில் இடதுசாரிகள் பங்கேற்பதா இல்லையா என்கிற சர்ச்சை நடந்து வந்த நேரம் அது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான இந்திரஜித் குப்தா, சதுரானன் மிஸ்ரா, பி.கே. வாசுதேவன் நாயர் போன்றவர்கள் ஆட்சியில் பங்கு பெறக் கூடாது என்று நினைத்தார்கள். ஆனால், முற்றிலும் விபரீதமாக சி.பி.ஐ.யின் பொதுக்குழு, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று தீர்மானித்தது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான சுர்ஜித், ஈ.கே. நாயனார் மற்றும் ஜோதிபாசு போன்றவர்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று விழைந்தனர். மார்க்சிஸ்ட் கட்சி சம்மதித்திருந்தால் ஜோதிபாசு ஒருவேளை பிரதமராகக்கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். ஒரு கம்யூனிஸ்ட்டின் தலைமையிலான கூட்டணி அரசு இந்தியாவில் பதவி ஏற்றிருக்கும்.
ஆனால், தலைவர்களின் விருப்பத்திற்கு விரோதமாக, மார்க்சிஸ்ட் கட்சியின் "பொலிட்பீரோ', ஆட்சியில் பங்கு கொள்ளக் கூடாது என்று அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. அந்தத் தீர்மானத்தை எதிர்த்து முன்னணியில் இருந்தவர் பிரகாஷ் காரத் தான். அதற்கு அவர் கூறிய காரணம்: ""நமது கொள்கைகளையும் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத, பதவிக்காக ஒவ்வொரு கட்டத்திலும் நமது கொள்கைகளைச் சமரசம் செய்து கொள்கிற விதத்தில் அமையும் ஆட்சியும் அதிகாரமும் நமது இயக்கத்தைப் பலமிழக்கச் செய்துவிடும். நாம் கேலிப்பொருளாகி விடுவோம்'' என்பதுதான்.
"நாம் செய்த சரித்திரத் தவறு' என்று ஜோதிபாசுவால் விமர்சிக்கப்பட்ட அந்த முடிவுக்குக் காரணமான பிரகாஷ் காரத், அப்போதும் இப்போதும் ஒரு விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறார். மாற்றங்களுக்கு வழிகாட்டும் நிலையில்தான் இடதுசாரிகள் இருக்கிறார்களே தவிர, மாற்றத்தை முன்னின்று வழிநடத்தும் எண்ணிக்கை பலம் பெற்றவர்களாக இல்லை என்பதுதான் அது.
தில்லி கோல்மார்க்கெட் பகுதியிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏ.கே.ஜி. பவனின் மூன்றாவது மாடியிலுள்ள ஓர் ஒதுக்குப்புறமான அறையில் அமர்ந்து மூன்றாவது முன்னணி பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாரா காரத் என்றால் அதுதான் இல்லை. இந்தியா முழுவதும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார். இப்போது அவரது கவலை எல்லாம் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும் என்பது மட்டுமே. ஏனைய மூன்றாவது அணித் தலைவர்களைப் போல, தான் பிரதமராக வேண்டும் என்பதல்ல!
பிரகாஷ் காரத்தின் மனைவி பிருந்தா காரத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். இருவருமே மாணவர் இயக்கத்திலிருந்து உயர்ந்தவர்கள். அவர் இப்போது மாநிலங்களவை உறுப்பினரும்கூட. 1975-ல் பிரகாஷ் காரத்தும் பிருந்தாவும் திருமணம் செய்து கொண்டபோது தங்களுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்கள். தங்களது கட்சிப் பணிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா? குழந்தை பெற்றுக் கொள்வது இல்லை என்பதுதான்!
நன்றி திணமனி நாள் :04.05.2009
1 கருத்து:
பல தெரியாத தகவல்கள்.பதிவுக்கு நன்றி.
கருத்துரையிடுக