-பிரபாத் பட்நாயக்
நவீன தாராளவாதம் இந்தியாவில் இன் னும் முழுமையாக வெற்றியடைந்து விட வில்லை. இன்றைக்கும், நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கிகளும், கேந்திரமான பொதுத் துறைத் தொழில்களும் தனியார்மயமாக்கப்பட் டுவிடவில்லை. பென்சன் நிதி ஊகமூல தனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட வில்லை. இந்தியக் கரன்சியும், முழு மாற் றுக்கு உட்படுத்தப்படவில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு தவிர, இந்திய நிதித் துறைக்கு பெருமளவில் அந்நிய நிதிச் சொத் துக்கள் எதுவுமில்லை. பொதுத்துறையை ஒழிப்பதும், உலக நிதி அமைப்புடன் இறுக் கமாக இணைப்பதும், ஒன்றுக்கொன்று தொடர்புடையது மட்டுமல்லாமல், ஒன்றை யொன்று வலுப்படுத்துவதுமாகும். நவீன தாராளவாதத்தின் அடிப்படையான இந்த இரண்டு அம்சங்களும் கட்டுப்படுத்தப்பட்டி ருக்கின்றன. நிதித்துறை தொழிற்சங்கங் களும், இடதுசாரிக் கட்சிகளும் இதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியதன் காரணமாகத் தான் இது சாத்தியமானது. எனவே, நவீன தாராளவாதம் இதில் பாதி வெற்றியைத்தான் அடைய முடிந்தது. ஆனால், இந்திய சமூகத் திற்குள் நிலவும் இடைவெளியை மேலும் பெரிதாக்குவதற்கும், நவீன இந்திய சமூகத் தின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்ப்பதற் கும் இந்தப் பாதி வெற்றியே போதுமானதாக இருக்கிறது.
சமூக ஒப்பந்தம்
சாதிகள், வர்க்கங்கள், பாலினம் மற்றும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி, அதனால் பெருமளவு பிளவுபட்டிருந்த கோடிக்கணக்கான மக்கள் ஒரு நவீன இந்திய சமூகமாக மாறியது வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அற்புதமாகும். விடுதலைப் போராட்டக் காலத்தில், குறிப்பாக, 1931 கராச்சி காங்கிரஸ் தீர்மானம் அதற்கு வழி கோலியது. உள்ளடக்கத்தில் ஒரு “சமூக ஒப்பந்தமாக”க் கருதப்பட்ட அதன் அம்சங் கள் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாச னத்தில் இடம் பெற்றன. அனைவருக்கும் வாக்குரிமை, மதச்சார்பின்மை, சிவில் உரி மைகள், சாதி மற்றும் பாலின அடிப்படை யிலான ஒடுக்குமுறைகள் ஒழிப்பு என்ற சமத் துவ சமுதாயத்தை உருவாக்குவது என்பதே அந்த அம்சங்கள். ஆனால், இன்று நிலைமை என்ன? ஒருபுறம், உலகத்தின் மிகப்பெரும் செல்வந்தர்களாக இந்தியர்கள், மறுபுறம் ஆயிரக்கணக்கான இந்திய விவசாயிகளின் தற்கொலை, அப்படியெனில், அந்த சமூக ஒப் பந்தத்தினை ஒழித்துக்கட்டும் வேலை தானே இது? மட்டுமல்லாமல், நவீன இந்திய தேசத்தின் அஸ்திவாரத்தையே அது அபா யத்துக்கு உள்ளாக்கியிருக்கிறதே?
விவசாய நெருக்கடி
விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியா ளர்களுக்கு ஆதரவான அரசின் தலையீட் டினை ஒழித்தது நவீன தாராளவாதமே. விவ சாய மானியங்களை வெட்டியதன் விளை வாக, வேளாண் இடுபொருள் செலவு அதிக ரித்தது. சமூக வங்கிக் கலாச்சாரம் மாறிப் போய், விவசாயிகளுக்கு நிறுவனக் கடன்கள் மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் கொள்ளை வட்டிக்காரர்கள் தயவில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாய விரிவாக்கப் பணி களிலிருந்து அரசு வெளியேறி விட்டதால், விவசாயிகள் பன்னாட்டுக் கம்பெனிகளை நம்பி நிற்கும் நிலை ஏற்பட்டது. வர்த்தகத் தாராள மயம், இறக்குமதிச் சந்தையில் செயற்கையாக குறைத்து விற்கப்பட்ட தானிய விலைகளு டன் போட்டி போட முடியாத துயரத்திற்கு இந்திய விவசாயிகளை உள்ளாக்கியது. உள்நாட்டுக் கொள்முதல் தொடர்ந்து குறைக்கப்பட்ட நிலையில், விவசாய விளை பொருள் ஆணை யம் மூலம் கிடைத்து வந்த குறைந்தபட்ச பாது காப்பும் கூட பறிபோனது. கிராமப்புறங்களில் அரசின் பொதுச் செலவினங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டதன் காரணமாக, கிராமப்புற மக் களின் வாங்கும் சக்தியும் பெருமளவு குறைந் தது. இதன் காரணமாக விவசாயத்துறையில் தேக்கமும், உணவு உற்பத்தியில் வீழ்ச்சியும் ஏற்பட்டது. மறுபுறத்தில், தனிநபர் சராசரி நுகர்வும் சரிந்தது. மலிவான இறக்குமதி ஒருபுறமும், உற்பத்திச் செலவு உயர்வு மறு புறமும் என்ற நிலையில் விவசாயிகள் வறு மைக்கு ஆளாயினர். குறைந்தபட்சக் கூலி யை விட அவர்களது வருமானம் குறைவாகிப் போனது. சிறு உற்பத்தியாளர்களின் நிலை யும் இதுவே. சீர்திருத்தங்கள் ஏற்கெனவே இவர்களின் வாழ்க்கையைப் பாழாக்கியிருக் கிறதென்றால், இன்றைய நெருக்கடி, நிலை மையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
அரசின் தலையீடு தேவை!
முதலாளித்துவத்தின் தாக்குதல்களிலி ருந்து விவசாயிகளையும், சிறு உற்பத்தி யாளர்களையும் காப்பாற்ற வேண்டுமென் றால், நம்போன்ற சமூகங்களில் அரசின் தலையீடு மிகவும் அவசியம். ஒருபுறம் சிறு உற்பத்தித் தொழில்கள் மறைந்து, மறுபுறம் முதலாளித்துவம் விரிவடையும் காலத்தில் இது போன்ற சிரமங்கள் தோன்றுகிறதோ என்று கூட சிலர் நினைக்கக் கூடும். எதார்த் தத்தில் என்ன நடக்கிறது என்றால், விவசாய மும், சிறு தொழில்களும் அழிவதால் அந்தத் துறையில் வேலைகள் பறிபோகின்றன; மறு புறம், வளர்ந்து வரும் முதலாளித்துவம் உரு வாக்கும் புதிய வேலைகள், பறிபோன வேலைகளுக்கு ஈடுகட்டும் இணையான எண்ணிக்கையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், முதலாளித்துவத் துறை வளர்ச்சி அதிகமாக அதிகமாக, வேலை வாய்ப்பு குறைவதும், வறுமை பெருகுவதும் தவிர்க்க இயலாதது.
சிறு தொழில்கள் முதலாளித்துவ வளர்ச் சியினால் அழியாமல் இருக்க வேண்டுமென் றால், அரசு தலையிட வேண்டும். அது பெரிய தொழில்களிலும், சிறிய தொழில்களிலும் உழைக்கும் மக்களின் வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக தலையிட வேண் டும். அதற்காக பெருந்தொகையினைச் செல வழிக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் ஒரு நவீன தாராளவாத அரசு செய்யாது. அதற்கு நேரெதிராகவே செயல்படும். ஏனெ னில், இது அரசுத் தலையீட்டுக் கொள்கை, நவீன தாராளவாதக் கொள்கை என எதிரெதி ரான இரு கொள்கைகள் சம்பந்தப்பட்ட விஷ யம் மட்டுமல்ல. அரசின் குணாம்சம் சம் பந்தப்பட்ட விஷயம். ஜவகர்லால் நேருவின் காலத்தில் இருந்ததும் முதலாளித்துவ சார்பு அரசுதான். முதலாளிகளின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தாலும், அது வர்க்கங் களுக்கு இடையிலான பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காணும் அரசாக இருந்தது. எனவே, அது சிறு உற்பத்தியாளர்களை பாது காப்பதையும் தனது கடமையாக ஏற்றுக் கொண்டது. ஆனால், இன்றைய அரசு நவீன தாராளவாத அரசாக மாறிவிட்டதால் அதைச் செய்யாது. நிதி உலகமயமாக்கல் பின் னணியில், உலகம் முழுவதுமுள்ள முதலா ளித்துவ அரசுகள் மாறியுள்ளன. அதன் ஒரு பகுதிதான் இந்திய அரசின் குணமாற்றமும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தீர்வு என்ன?
மக்களின், குறிப்பாக, விவசாயத்திலும், சிறுதொழில்களிலும் ஈடுபட்டுள்ள மக்களின் வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தான் இன்றைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அதற்கான திட்டங்களை முன்வைக் கும்போது கூட இன்றைய அரசு, அரசு - தனி யார் கூட்டுப் பங்கேற்பு எனக் கூறுகிறது. கண்டிப்பாக, இதில் தனியார் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்யப் போவதில்லை. அப்படியானால், இந்தத் தீர்வில் கூட முத லாளிகள் பயனடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடி யும்? இந்த முன்மொழிவு இரண்டு வகையில் ஜனநாயக விரோதமானது. எடுத்துக்காட்டாக, கட்டமைப்பு என்பது ஒரு பொதுவான பெயர். அதில் கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் சாலைகளும் அடங்கும்; ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் அடங்கும். தனியார் துறை எதற்கு முன்னுரிமை கொடுக்கும் எனத் தெரியாதா? இது ஒன்று. இரண்டாவதாக, இதில் ஈடுபடுத்தப்படும் பணம் ஏன் தனியார் கைகளுக்கு செல்ல வேண்டும்? அரசாங்கம் ஏன் நேரடியாக செலவழிக்கக் கூடாது? இவையே நாம் எழுப்பும் கேள்விகள்.
விவசாயிகளுக்கும், சிறு உற்பத்தியாளர் களுக்கும் பயனும் பாதுகாப்பும் அளிக்கும் வகையில், பெரியஅளவில் நிதி ஒதுக்கீடு செய்து மீட்டுயிர்ப்புத் திட்டங்களை உரு வாக்க வேண்டும். சுகாதாரம், கல்வி, தூய் மையான சுற்றுச் சூழல், குடிநீர், சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட கிராமப்புற கட்ட மைப்பு, விவசாய மேம்பாடு, உணவுப் பாது காப்பு, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தி யாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதரவு விலை ஆகிய அனைத்தையும் அத்த கைய திட்டங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யும்போது, நமது நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறா மல் அதற்கு கடிவாளமிடுவதும் அவசியம்.
குழிதோண்டி புதைக்க வேண்டும்!
தாராளவாதத்திலிருந்து விடுபடுவது என்ற பெயரில், தற்காலிகமாக ஒரு மாற்றுப் பாதைக்குச் செல்வதில் பயனில்லை. விவ சாயிகளை மையப்படுத்திய விவசாயமும், அதன் அடிப்படையிலான வளர்ச்சியுமே தீர்வு எனும்போது அதற்கு இசைவான பொரு ளாதாரக்கொள்கைகளும் அவசியமாகிறது. அப்படியானால், நவீன தாராளவாதத்தை முற் றிலும் தோற்கடிக்க வேண்டும். சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தினையும் முறி யடிக்க வேண்டும். அதற்கு எதிராக நாம் நடத் திய போராட்டத்தின் விளைவாக, நவீன தாரா ளவாதம் பாதி அளவில்தான் வெற்றி பெற முடிந்தது. உலக அளவில் அது தோல்வி யைத் தழுவி பின்வாங்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அதை மேலும் பின் னுக்குத் தள்ளி, குழி தோண்டிப் புதைக்க வேண்டும். அரசியல் சாசனம் உள்ளடக்கி யிருக்கும் சமூக ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பகுதியான ஜனநாயகத் தேர்தல்கள் அதற்கு இன்று மிகப்பெரும் வாய்ப்பாக அமைந் துள்ளது. அதைப் பயன்படுத்த வேண்டியது அனைவரின் கடமையுமாகும்.
(கட்டுரை சுருக்கம் : இ.எம்.ஜோசப்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக