‘பொற்காலம்’: நேற்றும் இல்லை, இன்றும் இல்லை


சு.பொ.அகத்தியலிங்கம்

"காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்" என அடிக்கடி ‘ஜோக்’ அடிப்பது காங்கிராஸாரின் வாடிக்கையாகி விட்டது. "நடப்பதே காமராஜர் ஆட்சிதானே" என தனக்குத் தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்வதும் நமக்குப் பழகிப் போன ஒன்றே! "காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம்", "அண்ணா ஆட்சியைக் கொண்டு வருவோம்", "எம்ஜிஆர் ஆட்சியைக் கொண்டு வருவோம்" என்றெல்லாம் அவரவர் தேவைக்கு ஏற்ப முழக்கமிடுவதைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

Anna அந்த வரிசையில் "பக்தவச்சலம் ஆட்சியைக் கொண்டு வருவோம்" என்று யாரும் கூறுவதில்லை. ஏனெனில் ‘புழுத்த அரிசியும்’, ‘துப்பாக்கிச் சூடும்’ மாறாத வடுவாய் அவர்மீது படிந்து விட்டதால் அவரும் தப்பித்தார், நாமும் தப்பித்தோம். காமராஜர் ஆட்சியாகட்டும், அண்ணா ஆட்சியாகட்டும், எம்ஜிஆர் ஆட்சியாகட்டும் எதுவும் பொற்காலம் இல்லை. இவர்கள் ஆட்சியில் சில நல்ல அம்சங்கள் உண்டு. பல மோசமான அம்சங்களும் உண்டு. எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கிற ஞானம் நமக்கு வந்தால் மட்டுமே விமோச்சனம் பிறக்கும்.

ஆரம்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த பெருமை காமராஜர் ஆட்சிக்கு மகுடமெனில் முதுகுளத்தூர் கலவரம் கறைபடிந்த அத்தியாயமாகும். சீர்திருத்த திருமணம் செல்லும் என சட்டமாக்கியது, தமிழ்நாடு என பெயர் சூட்டியது போன்ற சாதனைக் கனிகள் அண்ணாவின் பெயர் சொல்லுமெனில், வெண்மணியில் 44பேர் உயிரோடு எரிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் இன்னொரு பக்கத்தைக் காட்டும். சத்துணவுத் திட்டம் எம்ஜிஆர் புகழை உரக்கப் பேசும், அதேசமயம் கல்வி வியாபாரத்துக்கு கால்கோள் நடத்தியது அவரது ஆட்சியின் கரும் பக்கம் ஆகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தவர்கள் மாறிய போதும், கோஷங்கள் மாறிய போதும் சமூகத்தில் அடிப்படையான அவலக் காட்சிகள் அப்படியே தொடர்கின்றன. வசதி படைத்தவர்களுக்கும், வறியவர்களுக்குமான இடைவெளி ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வளர்ச்சியின் இனிய கனிகளை ஒரு சிறு கூட்டம் தின்று கொழுக்க பெரும்பான்மையோர் சருகாய் வாடி வதங்குகின்றனர். உணவு, உடை, கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, ஏன் வழிபாட்டு இடத்தில் கூட பணக்காரனுக்கு ஒன்று ஏழைக்கு இன்னொன்று என இந்தியா "இரட்டை இந்தியாவாகவே" தொடர்கிறது.

‘உணவு, நிலம், வேலை’ என்பது விடுதலைப் போராட்ட கனவாகவே இருந்தது; இன்றும் அதுவே பெரும்பாலான மக்களின் வாழ்வின் இலக்காகவே மாறிப் போயுள்ளது. இதில் யாருடைய ஆட்சியை ‘பொற்காலம்’ என்று புளங்காகிதம் அடைவது? மாநில ஆட்சிகள் மட்டுமல்ல மத்தியிலும் இதே நிலைதான். நேரு, லால்பகதூர், இந்திரா, மொரார்ஜி, ராஜீவ், வி.பி.சிங், நரசிம்மராவ், தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் என யாருடைய ஆட்சியும் அடித்தள மக்களின் அடிப்படையான பிரச்சனைகளைத் தீர்க்கவில்லையே!

‘சோஷலிச மாதிரி சமுதாயம்’, ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’, ‘வறுமையே வெளியேறு’, ‘வேலையின்மையே வெளியேறு’, ‘21ம் நூற்றாண்டுக்கு போவோம்’, ‘வித்தியாசமான கட்சி, வித்தியாசமான ஆட்சி’ எத்தனை எத்தனை முழக்கங்கள். யாருடைய ஆட்சி பொற்காலம்?

விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா ‘ராமராஜ்ய’ கனவு கண்டு கொண்டிருந்தார்; நேருவோ ‘அசோக ராஜ்ஜியம்’ என அறிவித்துக் கொண்டிருந்தார். எந்த ராஜ்ஜியமும் வரவில்லை. யாருடைய வாக்குறுதியும் ஏழைகளுக்கு வாழ்க்கையைத் தரவில்லை. இனியும் ‘இவர் ஆட்சி’, ‘அவர் ஆட்சி’ என்ற கற்பனைக் கனவுகளை துடைத்தெறியுங்கள். "சென்ற தினி மீளாது மூடரே!" என்று பாரதி சொன்னது போல பழைய வரலாறு மீண்டும் அப்படியே நிகழாது. நிகழவும் கூடாது. தேர்தல் கணக்குகளுக்கு அப்பால் தேசம் பற்றிய கவலையோடு இளைய தலைமுறை எதிர்காலம் குறித்து அக்கறை காட்ட வேண்டும்.

நேற்றும், இன்றும் தமிழக, அகில இந்திய அரசியல் தனிநபர்களையே மையமாக வைத்து சுழற்றப்படுவதால் அது சுரண்டும் வர்க்கத்திற்கு அது துணையாக இருக்கிறது. இவருக்குp பதில் அவர். அவருக்குp பதில் இவர் என சீட்டுக்கட்டை மாற்றுவது போல் சில மயக்க மாயாஜாலம் செய்துவிட்டு கொள்கை வகுப்பதிலிருந்து மக்களை தள்ளி வைத்து விடுகிறது. இந்த நிலை மாறாமல் இத்தேசத்திற்கு விடிவு இல்லை.

"என்னை முதல்வராக்குங்கள் சகல நோய்களும் தீரும்" என மோடிமஸ்தான் பாணியில் ஒரு புறம் பிரச்சாரம்; எனக்கென்று கொள்கையேதுமில்லை. மோடியையும் வரவேற்பேன், அவசரக்காலத்தையும் போற்றுவேன் என்பவர்களாலோ ரியஸ் எஸ்டேட் கொள்ளையர்கள் மற்றும் கள்ளச் சாராய ஃமாபியாக்களின் பணப்பெட்டியை நிரப்ப ‘மகாத்மா வேடம்’யிடுபவர்களாலோ விடியலைக் கொண்டு வர முடியும் என்று நம்புவதும் பேதமையே.

யார் முதல்வர்? யார் பிரதமர்? என்பதல்ல தேசத்தின் கவலை. இனி எந்தக் கொள்கை திசை வழியில் தேசம் செல்லப்போகிறது என்பதுதான் கவலை. யார் யார் என்னென்ன வாக்குறுதி கொடுக்கிறார்கள் என்பதல்ல இனி நம் கவலை. நோய் நாடி அதன் முதல் நாடி வாய் நாடி அதற்கு சரியான வைத்தியத்தை முன்மொழியும் மாற்றுதிட்டம்தான் தேவை. அதையார் முன்மொழிகிறார்கள் என்பதுதான் கேள்வி.

‘சாதனை பிதற்றல்களும்’, ‘சாகச வாக்குறுதிகளும்’ நம்மை சறுக்கல் பாதையில்தான் மீண்டும் மீண்டும் தள்ளும்; மாறாக, உண்மையை உரக்கப் பேசும் மன உறுதியும் நேர்மையும் இலட்சிய உறுதியும் கொண்ட தலைமையே நமக்குத் தேவை.

ஜோதிபாசு நேர்மையாக தன் சுய சரிதையில் கூறுகிறார்; "கடந்த ஆண்டுகளில் நல்லதாகவும், கெட்டதாகவும் பிரமாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை இப்போது என்னால் காண முடிகிறது. எனினும் உண்மையான பிரச்சனை என்பது இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நம் நாட்டில் சாதாரண, எளிய மக்களின் ஆட்சி என்பது இன்னமும் கைக்கெட்டாத கனவாகத்தான் இருக்கிறது."

35ஆண்டுகாலம் நிலச்சீர்திருத்தம்; பஞ்சாயத்து ஆட்சி என பல அடிப்படை மாறுதல்களை கொண்டு வந்து ஆட்சி நடத்திய கட்சியின் தலைவர் முதல்வர் அடக்கமாகவும் உண்மையாகவும் கூறும் வார்த்தைகள் பலரின் ‘பொற்கால’ பொய்மையை தவிடுபொடியாக்கி விடுகிறது. ஜோதிபாசு கூறினாரே அந்த சாதாரண மக்கள் ஆட்சி கைக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது. ஆனால், அதை எட்டும் வழி சுலபமல்ல. அதை நோக்கி "மூன்றாவது மாற்றை" உருவாக்குவது காலத்தின் தேவை.

மீண்டும் ஜோதிபாசு சொல்வதோடு நிறைவு செய்வோம் "மூன்றாவது அணி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறி வருகிறது. நீடித்த இயக்கங்கள், மக்களின் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாகத்தான் இதை உருவாக்க முடியும். முன்னெப்போதையும் விட இடதுசாரிகள் பொறுப்பு என்பது மேலும் முக்கியமானதாக மாறியுள்ளது."

ஆம்! போராட்ட களத்தில்தான் மூன்றாவது அணி வார்க்கப்பட வேண்டும்! தலைவர்களின் கைகுலுக்கல்களில் அல்ல.


- சு.பொ.அகத்தியலிங்கம் (agathee2007@gmail.com)

கருத்துகள் இல்லை: