கர்நாடக தேர்தல் முடிவு எடியூரப்பாவின் தியாகத்திற்கும், கவுடா - குமாரசாமி குடும்பத்தின் துரோகத்திற்க்கும் கிடைத்த முடிவு என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவும், தேவ கவுடா கட்சியும் ஆளுக்கு பாதி என்ற அடிப்படையில் ஆட்சியமைத்தன. முதலில் முதல்வரான குமாரசாமி தமது பதவிக் காலம் முடிந்தவுடன் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்தார்.
எடியூரப்பா உடனடியாக பதிவியை தியாகம் செய்கிறேன் என்று அறிவிக்கவில்லை. மாறாக, மாநிலம் முழுவதும் சென்று தேவகவுடா குடும்பத்தின் மீது மணல் வாரி தூற்றினார். இனிமேல் பாஜகவினர் கோயிலுக்கு செல்லும் பொழுது, தேவகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இடையில் கவுடா கட்சி திடீரென்று பல்டி அடித்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. உடனடியாக ' தியாக சீலர் ' எடியூரப்பா ஓடோடிச் சென்று முதல்வர் நாற்காலியை கைப்பற்றினார். ஒரு வார காலம் தான் அவரது ஆட்சி நீடித்தது. ஒரு நாளேனும் முதல்வராக இருந்தால் போதும் என்று ஆலாய்ப் பறந்தவர் எப்படி தியாக சீலர் ஆனார் என்று புரியவில்லை. சந்தர்ப்பவாதத்தின் கடைக்கோடிக்கு சென்றது கவுடா கட்சி மட்டும் அல்ல பாஜகவும் தான்.
எடியூரப்பா குறுகிய காலம் ஆட்சியில் இருந்த போதும், அந்த இடைக்காலத்தில் புரிந்த சாதனையை மக்கள்
அங்கீகரித்துள்ளனர் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அப்படி என்ன எடியூரப்பா ஒரு வார காலத்தில் சாதனை செய்தார் என்பது தான் புரியவில்லை. அடுத்ததாக நம்மூர் இல. கணேசன் "கர்நாடக முதல்வராக பொறுப் பேற்றுள்ள எடியூரப்பா ஒரு அப்பழுக்கற்ற தேச பக்தர் என்றும், அவர் நிச்சயம் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு இடையூறு செய்யமாட்டார் என்று கூறுகிறார். ஓகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தம் என்று முதன் முதலாக கிளப்பி விட்டதே எடியூரப்பா தான். அப்போது இல. கணேசன் " பாவம் எடியூரப்பா விபரம் தெரியாதவர், அவரை யாரோ ஓகே நக்கலுக்கு சுற்றுலா போகலாம் என்று அழைத்து வந்து விட்டார்கள் என்று கூறினார்.
இப்படி யார் கூப்பிட்டாலும் எங்கு வேண்டுமானாலும் சென்றும் போராட்டம் நடத்தும் எடியூரப்பா நாளை குஜ்ஜார் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த ராஜஸ்தான் சென்றாலும் ஆச்சரியம் இல்லை. பாவம் கர்நாடக மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக